ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 20 ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்.!

You are currently viewing ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 20 ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்.!

சுமத்திரா தீவில் மையம் கொண்டு 26.12.2004 அன்று தமிழீழத்தின் கரையோர மாவட்டங்களை தாக்கியது போரின் துயரில் ஊர்பிரிந்து – உறவிழந்து வாழ்ந்த உறவுகளின் உடைமைகள் முதல் பல உயிர்களையும் வயது வேறுபாடு இன்றி கடல் காவுகொண்டது அதன் துயரின் 20 ம் ஆண்டு நீங்கா நினைவுகள் இன்றாகும்.​

வரலாற்றில் எப்போதாவது நடைபெறும் ஒரு சம்பவம் ஒரு தேசிய இனத்தை முழுமையான சோகத்தில் ஆழ்த்திவிடுவதுண்டு.

தமிழீழ மக்களைப் பொறுத்தளவில் இத்தகைய பல தேசியத் துயர்களை எமது விடுதலைப் போராட்ட காலத்தில் அவர்கள் சந்தித்திருந்தார்கள்.

இத் துயர்களுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல கடற்கோள் ஏற்படுத்திய அழிவுகள் மாபெரும் தேசியத் துயராக வரலாற்றில் பதியப்பட்டு விட்டது.

தமிழீழக் கடற்பரப்பில் மூன்றில் இரண்டு பகுதிக் கடற்கரை கடற்கோளால் துவம்சம் செய்யப்பட்டுள்ளது.

ஒரு சிலநிமிட நேரத்தில் அழிந்த பல்லாயிரம் உயிர்களும் கடல் அலைகளின் நம்பமுடியாச் சீற்றமும் தமிழீழ மக்களை உலுப்பியெடுத்துவிட்டது.

பண்டைய தமிழ் நூல்களில் பதிவாகியிருந்த கடற்கோள் என்ற சொல், எந்தவித அனுபவ அர்த்தமும் இல்லாத கற்பனைச்சொல் போன்றே, கடந்த பல நூற்றாண்டுகளாகத் தமிழரின் மனதில் இருந்துவந்தது.

26.12.2004 அன்று காலைவேளையில் கரையோரக் கிராமங்களை, பட்டணங்களை விழுங்கிய கடல்நீர், கடற்கோளின் அர்த்த பரிமாணத்தை தமிழ்மக்களுக்குக் காட்டிச் சென்றது.

கரையில்வந்து கால் நனைத்துச் செல்லும் கடல்நீர் திடீரெனப் பனையளவு உயரம் எழும்பிக் கரைகளைச் கபளீகரம் செய்த காட்சி ஒரு அழிவுகரமாகவே காணப்பட்டது.

அழிவையும் – அச்சத்தையும் ஒருங்கே வெளிப்படுத்தும் ‘சுனாமி’ என்ற ஒரு சொல்லையும் தமிழ் அகராதிக்குள் கடற்கோள் திணித்து விட்டுச் சென்றுள்ளது.

தலைவர் பிரபாகரன் கூறியதுபோல இது எமது மக்கள் சந்தித்த இரண்டாவது சுனாமி ஆகும். ‘ஆமி ஏற்படுத்திய சுனாமி’ என்று சிங்களப்படையின் இன அழிப்பை தலைவர் உவமானப்படுத்தியிருந்தார்.

தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் தழிழீழக்கடல் வகித்துவரும் பங்கு – பாத்திரம் முக்கியமானது. அதுபோலவே, கரையோர மக்களின் போராட்டப் பங்களிப்பும் காத்திரமானது.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின் 20 ம் ஆண்டு நீங்கா நினைவு நாள்.! 1

ஒருபுறம் இயற்கை ஆபத்தையும் – மறுபுறம் சிங்களக் கடற்படையின் கொலைவெறி ஆபாயத்தையும் எதிர்கொண்டு அன்றாட வாழ்க்கை நடத்திய இம்மக்கள் கடற்கோள் என்ற பேரனர்த்தத்தையும் எதிர்கொண்டது பெரும் துயரத்தைத் தருகின்றது.

இத் துயரத்தின் சோகவடுக்கள் அம் மக்களை இன்னும் பல வருடங்களுக்கு வாட்டத்தான் போகின்றது.

கடலுக்கு பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோரின் துயரும், பெற்றோரைப் பறி கொடுத்த பிள்ளைகளின் சோகமும், வாழ்க்கைத் துணையை இழந்தவர்களின் கவலைகளும் தமிழ் இனத்தின் குடும்பச்சோகமாகவே உணரப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்து வாழும் தமிழீழ மக்கள் இந்த இயற்கையின் சீற்றத்தைக் கேள்வியுற்று துடிதுடித்துப் போனதையும் – தாயகத்து உறவுகளுக்கு வாரிவழங்கி உதவிகள் புரிந்ததையும், அவர்களுக்காகக் கண்ணீர் வடித்தழுததும் இந்தத் தேசிய சோகத்திற்குச் சாட்சிகளாக உள்ளன.

வரலாற்றில் நாம் சந்தித்திராத ஒரு பேரழிவை கடல் தந்திருந்தாலும் அது எங்களது எதிரியல்ல. மாறாக, அது எங்களது தேசியச் சொத்து. இயற்கையை அனுசரித்து அதை வசப்படுத்துவதில்தான் மனிதரின் வெற்றி தங்கியுள்ளது. அறிவியலின் வழிகாட்டலுடன் பெற்ற அனுபவங்களையும் துணையாகக்கொண்டு, எதிர்காலத்தில், இயற்கையின் சீற்றத்தை எதிர்கொள்வோம்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply