ஆஸ்திரேலியாவில் 1 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலிய நாட்டில் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 40 சதவீதத்தினர், அதாவது 1 கோடி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் 2-வது மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஆப்டஸ், இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இதை இணையத்தாக்குதல் என்று வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் இது அந்த நாட்டின் வரலாற்றில் மிக மோசமான தரவு மீறல் என்றும் அவர்கள் கருதுகின்றனர்.
இந்த தரவு திருட்டு தொடர்பில் ஆப்டஸ் கூறும்போது,
“தற்போதைய மற்றும் முன்னாள் வாடிக்கையாளர்களின் பெயர்கள், பிறந்த தேதி, வீட்டு முகவரி, பாஸ்போர்ட்டு மற்றும் டிரைவர் உரிம எண்கள் உள்ளிட்டவை திருடப்பட்டுள்ளவற்றில் அடங்கும். அதே நேரத்தில் பணம் செலுத்தும் விவரங்கள் மற்றும் பாஸ்வேர்டுகள் திருடப்படவில்லை” என தெரிவித்தது.
28 லட்சம் பேரின் பாஸ்போர்ட்டு மற்றும் டிரைவர் உரிம எண்கள் திருடப்பட்டுள்ளன. இந்த தரவு திருட்டுக்காக ஆப்டஸ் தலைமை நிர்வாகி கெல்லி பேயர் ரோஸ்மரின் மன்னிப்பு கோரி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறும்போது,
“இது நவீனமான தாக்குதல். எங்கள் நிறுவனம் மிகவும் வலுவான இணைய பாதுகாப்பைக் கொண்டுள்ளது. இந்த திருட்டைத் தடுக்க முடியாமல் போனதற்காக ஏமாற்றம் அடைந்துள்ளேன்” என தெரிவித்தார்.