ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார்.
அதேநேரம் உக்ரைனுக்கு அமெரிக்கா இதுவரை வழங்கிய ஆயுதம் மற்றும் நிதியுதவிகளுக்கான தொகையை திருப்பித்தர வேண்டும் அல்லது உக்ரைனில் உள்ள அரிய கனிமங்களை அமெரிக்காவுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி நேற்று அமெரிக்கா சென்றார்.வெள்ளை மாளிகையில் அவர் ஜனாதிபதி டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பை அடுத்து ஓவல் அலுவலகத்தில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியின் பேச்சை மறுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பேசியது பதற்றத்தை அதிகரித்தது.
இந்த கடுமையான பேச்சுவார்த்தையால் திட்டமிடப்பட்டிருந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு ரத்தானது. பின்பு வெள்ளை மாளிகையில் இருந்து உக்ரைன் அதிபர் வெளிறிய முகத்துடன் வெளியேறினார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இங்கிலாந்து சென்றார். அங்கு அவரை பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் உற்சாகமாக வரவேற்றார். அப்போது அங்கிருந்தோர் உக்ரைனுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினர். உங்கள் ஆதரவுக்கு நன்றி என அதிபர் ஜெலன்ஸ்கி நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.