வேர்த்தறியா
கார்த்திகைத் திங்கள்
விழிமடல் உடைத்து
பொழியும் விழிநீர் மழை நடுவே
நேற்றுவரை அருகிருந்த
பிரியமானவரின்
உயிர் பிரியா நினைவுகள்
ஊசிமுனையாய் குத்தி
உயிர் வலிக்கும்
வீரமான ஈரமான கணங்களை
ஆள்மனக் கூட்டுக்குள்ளால்
மரணவலியோடு பிரசவிக்கும்
மாவீரர் வாரம்!
ஆண்தாயோடு
அருகிருந்து உணவருந்தி
அத்தாயின் திசைகாட்டியில்
தீப்பிழம்புகளாய்
நாளறிந்து நாழிகையறிந்து
விழிப்பார்வை விலாகத் திசை தகர்த்து
கருங்காற்றிலேறிய கந்தகமேனியரின்
பெரும் சரித்திரத்தின்
அரும் சாதனைகளை
வியப்பின் விருட்சங்களை
இதயம் இரைமீட்டும்
ஒவ்வொரு தருணங்களும்
தலை வணங்கா மண்ணை
புயம் உயர்த்தி நகர்துகிறது
இக்காலம்!
இது
நெருப்பு மனிதரின்
கனவுகள் கருக்கொள்ளும்
இனத்தின் இருப்பிற்கான
இறவாக் காலம்!
ஐம்பூதங்களையும்
மிரள வைத்து
ஈழத்தின் உரிமைக்குரலை
உலகத்தின் வஞ்சக நெஞ்சுகளில்
ஓங்கி அறைந்த மறவரின் மாதம்!
புயலாய் நின்ற பூமி
தென்றலையும் தழுவும்
என்பதால்தான்
பூக்களின் சிரிப்பாய்
வெள்ளைப்புறாக்கள்
உள்மனக்காயங்களை
உலகறியச் செய்ய
கள்ளமில்லா கைகுலுக்கலில்
வெள்ளையனின் விருப்பிலே
சர்வதேச சமாதானப்பேச்சு!
ஓரவஞ்சகமாய் போகுமென்று
ஆருடம் கோடிட்டு நின்றாலும்
சோரம் போகாத உறுதிப்பாட்டை
கோர மனிதர்களுக்கு இடித்துரைத்து
இதய பூமியின் இதயத்துடிற்பிற்காய்
புனிதமான போரில்
புறமுதுகாட்டாது
அறத்தின் வழி நின்று
மண்ணின் ஆன்மபலமாய்
கூன் நிமிர்தி நிற்கிறது
கார்த்திகை மாதம்!
✍தூயவன்