தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் இத்தாலியில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வைரஸ் பரவுவதை தடுக்க இத்தாலி அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பால், பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பால் பலியானோரின் எண்ணிக்கை 366 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7382 ஆக உயர்ந்துள்ளது.
ஏற்கனவே, மக்கள் பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள இத்தாலி அரசு கைகுலுக்குதல் , முத்தமிடுதல் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்று அந்நாட்டு மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் அந்நாட்டு பிரதமர் கியூசெப் கோன்டே வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் பயணக் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.