இத்தாலி நோக்கி சென்ற புலம்பெயர்ந்தவர்களின் படகு மஹ்தியா கடல் பகுதியில் கவிழ்ந்ததை தொடர்ந்து, 27 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்து வரும் வறுமை, உணவு பற்றாக்குறை அதனால் ஏற்படும் மோதல் போக்கு போன்றவை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் இந்த நாடுகளை சேர்ந்த மக்கள் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்தவர்களாக சென்றடைய முயற்சிக்கின்றனர்.
இவ்வாறு புலம்பெயரும் மக்கள், சிறிய படகுகளில் ஐரோப்பாவை அடைய முயற்சிக்கும் போது, வழியில் படகு கவிழ்ந்து மக்கள் உயிர்களை இழக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது இத்தாலி நோக்கி சென்ற வட ஆப்பிரிக்காவின் துனிசியா நாட்டை சேர்ந்த புலம்பெயர்ந்தவர்களின் படகுகள் கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், புலம்பெயர்ந்த மக்கள் சென்ற படகுகள் மஹ்தியா கடல் பகுதியில் காணவில்லை என்று துனிசிய கடலோர காவல் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறிப்பிட்ட பகுதிக்கு சென்ற கடற்படை, கடலில் தத்தளித்த 53 பேரை பத்திரமாக மீட்டனர், அதில் 2 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காற்று அதிகமாக வீசியதால் படகு கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது, மேலும் இந்த விபத்தில் 27 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
உயிரிழப்புகள் குறித்து உறுதியான தகவல்கள் வெளியாக நிலையில், காணாமல் போன பலரை தேடும் பணியில் மீட்பு படையினர் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.