வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகான நிரந்தரமான தீர்வினை வழங்குவதற்கு அழுத்தமளிக்குமாறு இலங்கைக்கான இந்தியாவின் புதிய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தவைர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அத்துடன், வடக்கு,கிழக்கு மாகாண சபைகளுக்காவது தேர்தலை நடத்துவதற்கு இலங்கை அரசாங்கத்தினை வலியுறுத்துமாறு கோரியதோடு, அதற்கு இலங்கை அரசாங்கம் நிதியில்லை என்று கூறுமாக இருந்தால் அந்நிதியை இந்தியா வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.
இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள சந்தோஷ் ஜாவுக்கும் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நேற்று பிற்பகல் 4மணிக்கு நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன், தமிழ்த் தேசியக் முன்னியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், ஈ.பி.ஆர்.எல்.எப் இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும், சிரேஷ்ட தலைவர்களான இரா.சம்பந்தன் மற்றும் மாவை.சோ.சேனாதிராஜா பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாள்ஸ் நிர்மலநாதன், சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம், வினோநோதராதலிங்கம் ஆகியோர் பங்கேற்றனர்.