இந்தியாவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் நேற்று 2,33,728 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், இந்தியாவில் இதுவரை இல்லாதவாறு ஒரே நாளில் மிக அதிகமாக 1,338 கொரோனா மரணங்களும் நேற்று பதிவானதாக இந்திய மத்திய சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 15-ஆம் திகதி 1,275 பேர் கொரோனாவுடன் உயிரிழந்ததே இதற்கு முன்னர் ஒரு நாளில் அதிக உயிரிழப்பாக பதிவாகியிருந்தது.
இந்தியாவில் மிக அதிகளவாக மகாராஷ்டிரா மாநிலத்தில் நேற்று 63 ஆயிரத்து 729 பேருக்கு தொற்று உறுதியானது. இது நேற்று இந்தியா முழுவதும் பதிவான தொற்று நோயாளர்களில் 27 வீதமாகும். உத்தரபிரதேசத்தில் 27,426 புதிய தொற்றுநோயாளர்களும் டெல்லியில் 19,486 புதிய நோயாளர்களும் நேற்று உறுதி செய்யப்பட்டனர். புதிய தொற்று நோயாளர்களுடன் இந்தியாவில் பதிவான மொத்த தொற்று நோயாளர் தொகை 1 கோடியே 45 இலட்சத்து 21 ஆயிரத்து 654 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், கொரோனா மரணங்கள் 1 இலட்சத்து 75 ஆயிரத்து 673- ஆக உயர்ந்துள்ளன. இந்தியா முழுவதும் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு முடிவடைந்த 24 மணி நேரங்களில் சுமார் 27.3 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இவற்றுடன் நாடு முழுவதும் தடுப்பூசி போடப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 கோடியே 72 இலட்சத்து 23 ஆயிரத்து 509 ஆக பதிவாகியுள்ளது.
தினசரி தொற்று நோயாளர் தொகையில் கடந்த இரு வாரங்களாக உலகில் இந்தியாவே முதலிடத்தில் உள்ளது. அமெரிக்க இரண்டாவது இடத்திலும் பிரேசில் மூன்றாவது இடத்திலும் உள்ளன.