இந்தியா உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்யும் வேளையில் பயங்கரவாதம் ஏற்றுமதி செய்யும் பணியில் பாகிஸ்தான் ஈடுபடுகிறது என இந்திய ராணுவ தலைமை தளபதி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.
இந்தியா மற்றும் நமது அண்டை நாடான பாகிஸ்தான் உள்பட 199க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. இதனை தடுக்க இந்திய அரசு பல வகைகளில் போராடி வருகிறது.
இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா நகரில் இந்திய ராணுவ தலைமை தளபதி எம்.எம். நாராவனே செய்தியாளர்களிடம் இன்று பேசினார். அவர் கூறும்பொழுது, நமது சொந்த நாட்டு மக்களுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதற்கும் இந்தியா, மருத்துவ குழுக்களை அனுப்பியும் மற்றும் மருந்துகளை ஏற்றுமதி செய்தும் வருகிறது.
ஆனால், மறுபுறம் பயங்கரவாதம் ஒன்றையே ஏற்றுமதி செய்யும் பணியில் பாகிஸ்தான் ஈடுபட்டு உள்ளது. இது வரவேற்பிற்குரியது அல்ல என கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்று கிழமை மாலை 5 மணியளவில் பாகிஸ்தான் ராணுவம், கெரான் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில், பொதுமக்களை குறிவைத்து அத்துமீறி தாக்குதல் நடத்தியது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லை பகுதியில் நடந்த இந்த தாக்குதலில் பொதுமக்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்தது. நடப்பு ஆண்டில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முறை, எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.