இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு நாள்!

You are currently viewing இந்திய இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டோரின் 34 வது நினைவு நாள்!

1987 ம் ஆண்டு யாழ் போதனா வைத்தியசாலைக்குள் நுழைந்த இந்திய இராணுவத்தினரால் யாழ் போதனா வைத்தியசாலையில் கடமையில் இருந்த 21பேர் இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டிருந்ததன் 34 ம் ஆண்டு நினைவு நாள் யாழ் போதனா வைத்தியசாலை ஊழியர்களின் ஏற்பாட்டில் இன்று காலை இடம்பெற்றது.

இந்திய இராணுவத்தினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டோரின் நினைவாக உயிரிழந்தோரின் உறவுகளால் பொது சுடர் ஏற்றப்பட்டு படுகொலை செய்யப்பட்டோரின் திருவுருவப் படங்களுக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.

சுகாதார நடைமுறைகளை பேணி மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் பிரதிப் பணிப்பாளர் வைத்தியசாலை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் கூறுகையில் :

1987 ஒக்ரோபர் இருபத்தோராம் திகதி மாலை 4.30 மணியளவில் வைத்தியசாலையினுள் வந்த இந்திய இராணுவத்தினர் மறுநாள் காலை 10.00 மணி வரை வைத்தியசாலையில் மக்கள் மீது தாக்குதலை நடத்தினார்கள். தாக்குதலிற் காயப்பட்டவர்கள் சத்தமிடும் போது அவர்கள் மீது கைக்குண்டினை எறிந்ததுடன், துப்பாகியாலும் சுட்டார்கள். மறுநாள் காலை 6.00 – 7.00 மணிக்கிடையில் வைத்தியசாலையின் இருபத்தாறாவது நோயாளர் விடுதிப் பக்கமிருந்து சம்பவ இடத்திற்கு வந்த வைத்தியர் சிவபாதசுந்தரம் அவர்களும், இரண்டு தாதியினரும் இந்தியச் இராணுவத்தினருடன் கதைத்து எஞ்சியிருக்கும் பொதுமக்களைக் காப்பாற்ற முயற்சித்தார்கள். ஆனால் இராணுவத்தினர் ஓடிச் சென்று துப்பாக்கியினை எடுத்து வைத்தியரையும் கூடச்சென்றவர்களையும் சுட்டதில் அவர்கள் அனைவரும் உயிரிழந்தார்கள். காலை 10.00 மணியளவில் ஏனைய வைத்தியர்கள் எடுத்த முயற்சியினால் சம்பவத்தில் காயமடைந்து உயிருடனிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டார்கள். சம்பவத்தில் உயிரிழந்த மூன்று வைத்தியர்கள், இரண்டு தாதிமார்கள், மேற்பார்வையாளர், ஊழியர்கள் உட்பட இருபத்தொரு மருத்துவமனை பணியாளர்களும், நோயளார் விடுதிகளிற் சிகிச்சை பெற்றுவந்த நாற்பத்தேழு நோயாளர்களுமாக மொத்தம் அறுபத்தெட்டுப் பேர் உயிரிழந்தார்கள். உயிரிழந்த அனைவரது உடல்களையும் வைத்தியசாலை பின்வாசற் பக்கமுள்ள பிண அறைக்கு அருகிற் போட்டு இந்தியப்படையினர் எரியூட்டினர் எனத் தெரிவித்தார்.

1987ஆம் ஆண்டு ஒக்ரோபர் இருபத்தோராம், இருபத்திரண்டாம் திகதியில் கடமையின்பால் உயிர்நீத்த வைத்தியர்கள் உட்பட இருபத்தொரு ஊழியர்களையும் அவர்களுடன் உயிரிழந்த நோயாளர்கள் நாற்பத்தேழு பேரையும் யாழ்.மருத்துவமனை ஒவ்வொரு வருடமும் நினைவுகூர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply