இந்திய உயர்ஸ்தானிகரிடம் முக்கியமான கோரிக்கையை வௌிப்படுத்திய கஜேந்திரகுமார்!

You are currently viewing இந்திய உயர்ஸ்தானிகரிடம் முக்கியமான கோரிக்கையை வௌிப்படுத்திய கஜேந்திரகுமார்!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பு உருவாக்கத்தினை தமிழர்களின் ஆதரவுடன் முன்னெடுக்கவுள்ளதாக காண்பிப்பதற்கு திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு ஆதரவளித்து இந்தியா வரலாற்றுத் தவறைச் செய்துவிடக்கூடாது என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் நிறைவின் பின்னரான நிலையில் சமகால மற்றும் எதிர்கால அரசியல்,பொருளாதார நிலைமைகள் சம்பந்தமான கலந்துரையாடலொன்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுக்கும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் நேற்றையதினம் கொழும்பில் உள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றிருந்தது. இந்தச் சந்திப்பில் கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார், மற்றும் பொதுச்செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்ததாவது,

இந்திய உயர்ஸ்தானிகரின் அழைப்பின் பேரில் நானும், எமது கட்சியின் பொதுச்செயலாளரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தோம். இதன்போது புதிய அரசாங்கத்தின் அடுத்தகட்டச் செயற்பாடுகள் சம்பந்தமாக கவனம் செலுத்தப்பட்டது. அச்சமயத்தில் நாம் எமது நிலைப்பாடுகளை தெளிவுபடுத்தியதோடு கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளோம்.

அந்தவகையில், தமிழர்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் இந்தியா தலையீடுகளைச் செய்ததன் விளைவாகவே இந்திய, இலங்கை ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. குறித்த ஒப்பந்தத்தில் சமஷ்டியை மையப்படுத்திய குணாம்சங்கள் காணப்படுகின்றன.

இருப்பினும் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை மலினப்படுத்தும் வகையிலும் தமிழ் மக்களின் சமஷ்டிக் கோரிக்கையை வலுவிழக்கச் செய்யும் வகையிலும் தான் 13ஆவது திருத்தச்சட்டம் கொண்டுவரப்பட்டது.

13ஆவது திருத்தச்சட்டம் ஒற்றையாட்சிக்குள் தமிழ் மக்களை வலிந்து திணப்பதாகும். அதன் காரணத்தினாலேயே நாம் அதனை நிராகரிக்கின்றோம்.

நாம் இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை நிராகரிக்கவில்லை. அதனை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்.

இவ்வாறான நிலையில், தற்போது அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டுள்ளது.

அத்துடன் வடக்கு,கிழக்கிலும் ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. வழக்கமாகவே அரசாங்கத்துக்கு ஆதரவாக செல்கின்ற வாக்குகளின் அடிப்படையில் அவர்களுக்கு ஆசனங்கள் கிடைத்துள்ளன.

மாறாக தமிழ் தேசியத்துக்கு எதிராக மக்கள் வாக்களிக்கவில்லை. அதனை புள்ளிவிபரங்கள் மிகத்தெளிவாக காண்பிக்கின்றன. அவ்வாறு பெற்றுக்கொண்ட ஆசனங்களையும் வைத்துக்கொண்டு அநுரகுமார திசாநாயாக்க ஒற்றையாட்சியை மையப்படுத்திய புதியதொரு அரசியலமைப்பினை உருவாக்கவுள்ளார்.

தமிழ்த் தேசிய நிலைப்பாட்டில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்து அதனை எதிர்த்தாலும் கூட, வடக்கு, கிழக்கில் தேசிய மக்கள் சக்தியானது தனது பிரதிநிதித்துவங்களை அடிப்படையாக வைத்துக்கொண்டு குறித்த ஒற்றையாட்சி அரசியலமைப்பை வடக்கு,கிழக்கு தமிழ் மக்களும் ஏற்றுக்கொண்டுள்ளார்கள் என்று உள்நாட்டிலும், உலகத்துக்கும் காண்பிக்கவுள்ளார்கள்.

இந்த விடயத்துக்கு இந்தியா துணைபோய்விடக்கூடாது. அநுர தலைமையிலான அரசாங்கத்தின் ஒற்றையாட்சியை மையப்படுத்திய அரசியலமைப்பை ஏற்றுக்கொண்டு தமிழ் மக்களை நடுத்தெரிவில் விடுகின்ற செயற்பாட்டிற்கு துணைபோய் வரலாற்றுத் தவறை இழைத்துவிடக்கூடாது என்பது எமது கோரிக்கையாகும்.

எம்மைப்பொறுத்தவரையில் நாம் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வுயோசனையை முன்வைக்கின்றபோது அதனை மையப்படுத்தி பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவே உள்ளோம்.

குறிப்பாக எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியதைப்போன்று, தமிழ் மக்கள் பேரவையின் தேர்தல் விஞ்ஞாபனத்தை மையப்படுத்தியதாக அந்த கலந்துரையாடல் ஆரம்பமாகினால் அதில் பங்கேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.

அதேநேரம், பொறுப்புக்கூறல் விடயத்தினை முன்னெடுப்பதற்கு நாம் இந்தச் சந்தர்ப்பத்தினை சரியானதொரு தருணமாகவே பார்க்கின்றோம்.

இந்தியா, இந்த விடயத்தில் நேரடியாக ஈடுபடுவதற்கு நெருக்கடியான நிலைமைகள் காணப்படுமாக இருந்தால் நிச்சயமாக மூன்றாவது தரப்பை மையப்படுத்திய நகர்வுகளை மேற்கொள்வதற்கான ஒத்துழைப்புக்களை வழங்குவது பொருத்தமானதாக இருக்கும்.

குறிப்பாக, ராஜபக்ஷக்களும், இனவாதிகளும் தென்னிலங்கையில் பலமிழந்துபோயுள்ள நிலையில், இலங்கையில் இழைக்கப்பட்ட மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டமீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறுவதற்கு சர்வதேச குற்றவியல் நீதிவிசாரணையை முன்னெடுப்பது அவசியமாகும். அதன் மூலமாகவே நியாயமானதொரு நீதி நிலைநாட்டப்படும்.

தற்போதைய நிலையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சாட்சியங்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டாலும் அவற்றை கட்டுறுத்தி அடுத்தகட்டமாக விசாரணைகளை முன்னெடுப்பதற்கான எந்தவொரு சூழல்களும் காணப்படவில்லை.

ஆகவே, சாட்சியங்கள் திரட்டப்பட்டு, அதற்கான ஆதரங்கள் வலுவாக்கப்பட்டு அடுத்தகட்ட விசாரணை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இந்தியா பகிரங்கமான ஒத்துழைப்புக்களை வெளியிட முடியாது போனாலும் கூட, எதிர்மறையான பிரதிபலிப்புக்களைச் செய்யாது இருக்க வேண்டும் என்றும் கோரியுள்ளோம்.

எமது கருத்துக்களை உயர்ஸ்தானிகர் செவிமடுத்துக்கொண்டதோடு அடுத்தகட்டமாக மேற்படி விடயங்களை ஆராய்வதாகவும் குறிப்பிட்டார் என்றார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply