இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களுக்கான ஏற்றுக்கொள்ளத்தக்க இறுதித்தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என்ற உண்மையை இந்திய ஆட்சியாளர்களிடம் கொண்டுசென்று, அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கு அவசியமான அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு வழிவகை செய்யவேண்டுமென தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் சந்தோஷ் ஜா வெள்ளிக்கிழமை (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் தனது நற்சான்றுப் பத்திரத்தைக் கையளித்தார்.
அதுமாத்திரமன்றி அங்கு கருத்து வெளியிட்ட அவர் இந்திய – இலங்கை வரலாற்று நட்பை மேலும் பலப்படுத்தவும், வர்த்தக, முதலீட்டு, வலுசக்தி உள்ளட்ட பல்வேறு துறைகளில் நிலவும் நெருங்கிய ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துக் கருத்துரைத்த தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவரது பணிகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.
இருப்பினும் கடந்த காலத்தில் தமிழர் பிரச்சினைக்கு நிலையான இறுதித்தீர்வொன்றைக் கண்டடைவதை முன்னிறுத்தியே இருநாடுகளுக்கும் இடையில் இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது எனவும், அதில் இந்தியாவின் நலன்களும் தங்கியிருந்ததாகவும் தெரிவித்த அவர், இருப்பினும் அவ்வொப்பந்தத்தின் பிரகாரம் தமிழர்களுக்கான தீர்வு இன்னமும் வழங்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
எனவே இந்த உண்மையை புதிய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இந்திய ஆட்சியாளர்களிடம் கொண்டுசெல்லவேண்டும் எனவும், அதனூடாக ஆகக்குறைந்தது தமிழர் பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவகையிலான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு அழுத்தம் பிரயோகிக்கவேண்டும் எனவும் கஜேந்திரகுமார் மேலும் வலியுறுத்தினார்.