நடைபெற்று நிறைவடைந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தரப்புக்களுக்கு இடையில் ஒற்றுமையின்மை காணப்படாமையின் காரணமாகவே வடக்கில் பிரதிநிதித்தவ ரிதியான பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளது என்று இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வடக்கு,கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களிடத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிர் சந்தோஷ்யாவுக்கும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வடக்கு,கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு வியாழக்கிழமை (21) கொழும்பில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போதே இந்திய உயர்ஸ்தானிகர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
குறித்த சந்திப்பு தொடர்பில் தெரியவருதாவது,
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, பாராளுமன்றத்திற்கு தெரிவான உறுப்பினர்களுக்கு முதலில் தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு, வடக்கில் தமிழ் பிரதிநிதித்துவத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்ற விடத்தினை குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித்டோவல் உள்ளிட்டவர்களின் இறுதியான இலங்கை விஜயத்தின்போது நடத்தப்பட்ட சந்திப்புக்களில் தமிழ் கட்சிகளிடையேயான ஒற்றுமை பற்றி கூறப்பட்டது. அவ்வாறு ஒற்றுமையின்மையின் காரணத்தினால் தான் தற்போது பிரதிநிதித்துவத்தில் பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
புள்ளிவிபரரீதியாக காரணங்களை வெளிப்படுத்தினாலும், தமிழ் கட்சிகளின் பிரதிநிதித்துவங்கள் இழக்கப்பட்டுள்ளன என்பது உண்மையான விடயம் என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து தமிழரசுக்கட்சியின் உறுப்பினர்கள் சார்பில் கருத்துக்கள் வெளியிடப்பட்டன. குறிப்பாக, அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்தல், முதலீடுகளை மேலும் அதிகரித்தல், இளைஞர், யுவதிகளின் திறன்களை மேம்படுத்தல் உள்ளிட்ட விடயங்களில் இந்தியாவின் பங்களிப்பையும் ஒத்துழைப்பும் தொடர்ந்தும் அதிகளவில் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதேபோன்று, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை, மற்றும் இந்தியா ஆகிய இரண்டு தரப்புக்களால் மட்டும் தான் அடுத்துவரும் காலத்தில் அரசாங்கத்திற்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைத் தீர்வு மற்றும் பொறுப்புக்கூறல் சார்ந்து அழுத்தங்களை பிரயோகிக் முடியும். அந்தச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தொடர்ந்து, அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக கூறிவருகின்ற நிலையில், புதிய அரசியலமைப்பினை அவர்களுக்கு வேண்டிய வகையில் உருவாக்குவதற்கான பெரும்பன்மை பலம் அவர்களுக்கு உள்ளது. ஆகவே தமிழர்களின் அபிலாஷைகளை பூர்த்திசெய்யும் வகையில், இந்திய, இலங்கை ஒப்பந்தத்தினை அடியொற்றியதாக அந்த முயற்சிகள் இடம்பெற வேண்டும் என்பதை இந்தியா உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், அரசாங்கம் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளாத அரசியலமைப்பினை முன்னகர்த்துமாக இருந்தால் அதற்கு எதிராக வடக்கு,கிழக்கு மக்கள் நிச்சயமாக தமது திரட்சியான எதிர்ப்பினை வெளியிடுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டது.
இறுதியாக, டில்லியுடன் தமிழர்களின் விடயங்கள் சம்பந்தமாக பரந்துபட்ட கலந்துரையாடலுக்காக வாய்ப்பொன்றை பெற்றுத்தருமாறும் உயர்ஸ்தானிகரிடத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.