பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய இராணுவத்தினர் தாக்குதல் நடத்திவரும் நிலையில், ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் பல்வேறு நகரங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்தியா – பாகிஸ்தான் இடையே போர்ப் பதற்றம் உச்சம் பெற்ற நிலையில், நேற்றிரவு பாகிஸ்தான் இராணுவத்தினர் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் வீசி இந்தியாவின் எல்லைப்புற நகரங்களாக ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு – காஷ்மீர் மீது கடுமையான தாக்குதல் நடத்தினர்.
இதற்கு பதிலடி கொடுத்த இந்திய இராணுவத்தினர் பாகிஸ்தானின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழித்து ஒழித்தனர். அதன் தொடர்ச்சியாக இன்றும் ஜம்மு – காஷ்மீரின் உரி எல்லைப் பகுதியில் இந்திய இராணுவ நிலைகளை குறிவைத்து சிறிய வகை பீரங்கி மற்றும் துப்பாக்கிச் சூட்டில் பாகிஸ்தான் ஈடுபட்டு வருவதாக தகவல் தெரியவந்துள்ளது.
அதேவேளையில் ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா, ராஜஸ்தானின் ஜெய்சல்மார், பஞ்சாப், ஹரியாணாவின் அம்பாலா ஆகிய இடங்களில் நேற்றிரவைப் போலவே, இன்றும் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டிருக்கிறது. இதனால், நேற்றைப் போலவே இன்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கபடுவதால், தெரு விளக்குகள், வீட்டு மின் விளக்குகள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. அதேவேளையில், ஜம்முவில் மருந்துக்கடைகளும் மூடப்பட்டுள்ளன.
உரி எல்லையில் தற்போது கடும் ஷெல்வீச்சு தாக்குதல் நடத்தப்படுவதாக செய்திகள் சொல்கின்றன.
இதேவேளை
இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் நீடிப்பதால் டெல்லி விமான நிலையத்தில், கடந்த 2 நாட்களில் 228 விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீநகர், ஜம்மு, அமிர்தசரஸ், லே, சண்டிகர், தர்மசாலா, பிகானீர், ஜோத்பூர், கிஷன்கர் மற்றும் ராஜ்கோட்டிற்கு செல்லும் அனைத்து விமானங்களையும் மே 10ஆம் திகதி நள்ளிரவு வரை நிறுத்தி வைக்கப்படுவதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.