மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மீறப்பட்டுள்ளதை அமைச்சரவை தீர்மானம் மூலம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நிராகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கு அந்த அரசாங்கத்தின் காலத்திலும் நீதி கிடைக்கப்போவதில்லை உறுதியாகின்றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னியின் தலைவரும், யாழ்.மாவட்ட தலைமை வேட்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தேசிய அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்துள்ளது. அது மாற்றதினை ஏற்படுத்தப்போவதாக கூறுகின்றது. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேசிய மக்கள் அரசாங்கமும் அநீதியை இழைக்கப்போகின்றது என்பதை முற்கூட்டியே அது அறிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெற்ற மனித உரிமைகள், மனிதாபிமாச் சட்ட மீறல்கள் சம்பந்தமான சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கப்போவதில்லை என்றும், சர்வதேச விசாரணையாளர்களின் பங்கேற்புக்கு இடமளிக்கப்போவதில்லை என்றும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைச்சரவை தீர்மானத்தினை எடுத்துள்ளது.
குற்றம் செய்தவர்கள் தமது குற்றத்தை விசாரிப்பது என்பது இயற்கை நீதிக்கு முற்றிலும் முரணானதாகும் என்ற நியாயத்தினை ஏற்றுக்கொள்கின்ற எந்தவொருவரும் ஆட்சியில் உள்ள அரசாங்கத்தின் கூற்றை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலைச் செய்யாத, கடந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகின்றபோது மிகவும் மோசமானதொரு தரப்பாக இருக்கப்போகின்றது என்பதை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகின்றோம்.
ஆகவே தமிழருடைய தேசிய நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்காத வகையில் பேரம்பேசக்கூடிய ஒரு தரப்பினை வடக்கு,கிழக்கில் இருந்து அமோக வெற்றியுடன் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
குறிப்பாக, வடக்கு,கிழக்கு மக்கள் மாற்றத்தினை விரும்பி அதற்கான ஆதரவினை வழங்கியுள்ளார்கள் என்ற செய்தியை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆணை வழங்குவதன் ஊடாக வெளிப்படுத்த வேண்டும் என்றார்.