இந்த ஆண்டுக்கான பி.பி.சி.யின் சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸ் தட்டிச் சென்றார்!

  • Post author:
You are currently viewing இந்த ஆண்டுக்கான பி.பி.சி.யின் சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸ் தட்டிச் சென்றார்!

இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்ட பி.பி.சி. குழுமம் 1954-ம் ஆண்டு முதல் சிறந்த விளையாட்டு வீரர்-வீராங்கனைகளை தேர்வு செய்து விருது வழங்கி கவுரவித்து வருகிறது. பொதுமக்களிடம் வாக்கெடுப்பு நடத்தி இந்த விருதுக்கு உரியவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இந்த ஆண்டுக்கான பி.பி.சி.யின் சிறந்த வீரர் விருதை பென் ஸ்டோக்ஸ் தட்டிச் சென்றார்! 1
பென் ஸ்டோக்ஸ்

இந்த ஆண்டுக்கான சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது வழங்கும் விழா ஸ்காட்லாந்தில் உள்ள அபெர்டீனில் நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் சிறந்த விளையாட்டு வீரர் விருதை, இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பெற்றார்.

கடந்த ஜூலை 14-ந் தேதி லண்டன் லார்ட்சில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்துக்கு எதிராக இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 98 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் 84 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்து ஆட்டநாயகன் விருது பெற்றதுடன், அணி முதல்முறையாக உலக கோப்பை வெல்ல முக்கிய காரணமாக விளங்கினார். இந்த போட்டியில் சூப்பர் ஓவர் முடிவில் இரு அணிகளும் சமநிலை வகித்ததால் அதிக பவுண்டரி அடித்ததன் மூலம் இங்கிலாந்து அணி கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. இதேபோல் லீட்சில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் தொடரின் 3-வது போட்டியில் 135 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்ததுடன் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். பென் ஸ்டோக்சின் இந்த செயல்பாடுகள் தான் அவருக்கு இந்த உயரிய விருதை பெற்றுக்கொடுத்துள்ளது.

வாக்கெடுப்பில் 2-வது இடம் பிடித்த 6 முறை பார்முலா-1 கார் பந்தய போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹாமில்டனும், 3-வது இடம் பெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நடப்பு உலக சாம்பியனான இங்கிலாந்து தடகள வீராங்கனை டினா ஆஷெர் சுமித் ஆகியோரும் இந்த விருதினை பெற்றார்கள். இந்த சீசனுக்கான ஆஷஸ் தொடரில் 774 ரன்கள் குவித்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஸ்டீவன் சுமித் இந்த விருதுக்கான பட்டியலில் இடம் பெற்று இருந்தாலும் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

2005-ம் ஆண்டுக்கு பிறகு இந்த விருதை பெறும் முதல் கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆவார். ஒட்டுமொத்தத்தில் இந்த விருதை பெறும் 5-வது கிரிக்கெட் வீரர். ஏற்கனவே கிரிக்கெட் வீரர்கள் ஜிம் லாகர் (1956-ம் ஆண்டு), டேவிட் ஸ்டீல் (1975), இயான் போத்தம் (1981), பிளின்டாப் (2005) ஆகியோர் இந்த விருதை பெற்றுள்ளனர்.

விருதை பெற்ற பென் ஸ்டோக்ஸ் கருத்து தெரிவிக்கையில், ‘இது தனிப்பட்ட வீரர்களுக்கான விருதாகும். ஆனால் நான் குழு போட்டியில் விளையாடி வருகிறேன். இந்த சிறப்பான தருணத்தை அணியில் உள்ள அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் வாழ்க்கையின் கடினமான பாதைகளை கடந்து வந்தேன். அப்போது எனக்கு குடும்பத்தினர் உள்பட நிறைய பேர் உதவியாக இருந்தனர். அவர்களுக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன்’ என்றார்.

பகிர்ந்துகொள்ள