இனத்துயரின் உச்சத்தை ஆதாரமாக்கி உறுதி கொள்வோம்!
ஆண்டின் மே மாதம் முழுவதும் ஆடம்பரகளியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்போம்.
எங்கள் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய யேர்மனிய வாழ் தமிழ்த்தேசிய உறவுகளே! உரிமையோடும், உணர்வோடும் உங்களிடம் நிகழ்காலத்தின் தேவை கருதிய, மிகவும் பொறுப்பும், பேண்தகு நிலையினையும் முன்னிறுத்தி, ஓர் வேண்டுகோளை முன்வைக்கின்றோம்.
இக்கட்டுரையினை முழுமையாகப் படித்து உங்கள் சிந்தனைகளைக் கூர்மையாக்கி, இவ் வேண்டுதலின் முக்கியத்துவத்தினை, பெறுமானத்தை, உணர்ந்து நாடு தழுவிய வகையில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை நல்குமாறும் வேண்டுகின்றோம். புலரும் 2020 புதிய ஆண்டிலும், இனிப் புலரும் ஒவ்வொரு ஆண்டிலும், தமிழ்த்தேசிய இனத்தின் மீது சிறீலங்கா இனவாத அரசு உச்சமாக, மிக மிலேச்சத்தனமாக 2009 மே மாதத்தில் நிகழ்த்தி முடித்த வன்கொடுமைகளின் காரணமாக, எமது இனம் சந்தித்த துயரின் உச்சத்தை ஆதாரமாக்கி, இன்னும் காய்ந்து போகாத இரத்தக் கறைகளுக்கான நீதியை நிலை நாட்ட உறுதி கொள்வோம்.
நெஞ்சு கனக்கும் தாயகக் கனவோடும், எம்மினத்தின் எதிர்கால சுதந்திர வேட்கையோடும் களமாடி மண்ணுறங்கும் மகத்தான ஆத்துமாக்களின் ஆன்ம பலிபீடங்களிலும், விடுதலைச் செயற்பாடுகளுக்கும், விடுதலை எண்ணங்களுக்கும் மதிப்பளித்து தொடர்ச்சியாக உறுதி தளராது அதன் தாங்கு சக்தியாக திகழ்ந்து விடுதலைத் தீயிலே வெந்துபோன ஆயிரமாயிரம் உறவுகளின் ஏக்கங்கள் முள்ளிவாய்க்கால் எனும் நெருப்பு வெளியாய் மே மாதத்தினை வரலாற்றில் கோடிட்டு நிற்கின்றது.
விழி திறக்கும் வலிகளாய் ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் எம்மைத் தழுவிச் செல்கிறது. ஆயிரமாயிரம் ஆன்மாக்களின் ஏக்கங்களும், கேள்விகளும் நெஞ்சை நெருடிக் கொள்கிறது. நீதியைப் பெறுதலில் மிகை நிரப்பப்படாத இடைவெளியில் தரித்து நிற்கின்றோம். இந்த ஏக்கங்களுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும் இந் நிகழ்காலத்தில் என்ன பதிலை நாம் வைத்துள்ளோம் என்பதை ஆழ்மனதில் கொள்ள வேண்டியவர்களாகவே ஒவ்வொரு உறவுகளும் இருக்கின்றோம். விடுதலையை அவாவி நிற்கும் ஓர் இனம் வீணே குந்தியிருத்தலும், உணர்வு நிலையில் உறக்கம் கொள்ளலும், மாறாக பொருத்தமற்ற வாதப்பிரதி வாதங்களோடும், தர்க்கங்களோடும் கால நீட்சியில் நிகழ்வின் போக்கில் பயணிப்பதும் வீணாகக் கரையும் காலமாகவே கடந்து செல்கின்றது.
அன்பான எங்கள் உறவுகளே!
எங்கள் இனம் கொடுத்து நிற்கும் பெறுமதியிடமுடியா உயிர் விலைகளையும், உடமை இழப்புக்களையும், இன்னும் விடுதலையை அவாவி நின்று, உலக நீதியின்முன் ஓலமிடும் செய்தியையும், நாம் தொடர்ச்சியாக இடைவிடாது, எமக்கான விடுதலை வாசலைத் திறக்கும் வரை, உலகின் திசையெங்கும் இடித்துரைக்கும் பாரிய வரலாற்றுப் பொறுப்பை காலம் எம்மிடமே கடத்தியுள்ளது. எனவே இந்த வரலாற்றுப் பணியில் இருந்து நாம் ஓரமாகவோ, பாராமுகமாகவோ இருந்துவிட முடியாது.
ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் முழுவதும் ஒட்டுமொத்த தமிழர்களும் வலியின் உச்சத்தைச் சுமந்து, வேதனையில் விம்மி நிற்கும் நிலைதனை உலக வல்லரசுகளும், உலக ஆட்சியாளர்களும், மனிதநேயங்கள் பற்றி பறைசாற்றுவோரும், ஏன் எமது எதிரிக்கும்கூட தெரிந்திருந்தும், எம்மில் பலரும் அதனை உணராது இருப்பதே வேதனையிலும் வேதனையாகின்றது.
மே மாதம் முழுவதும் ஒட்டுமொத்த தமிழர்களும் தாம் வாழும் கிராமங்கள், நகரங்கள், மாநிலங்களிலும் அதையும் தாண்டி நாடு தழுவிய வகையிலும் எங்கள் வலிகளை உணர்த்துவோம். எமது வாழ்விட மொழியில் எமக்குக் கிடைத்துள்ள நண்பர்கள், அயலவர்கள் தொடக்கம், அரச கரும பீடங்கள், தொண்டு நிறுவனங்கள், ஆன்மீக சபைகள் போன்ற தளங்களில் நீதிகோரலை முன்வைப்போம். எங்கோ ஒரு மூலையில் என்றில்லாது எங்கும் பரவும் உணர்வலைகள் நிச்சயமாக ஒருநாள் எமக்கான நியாயப் பார்வையை முன்கொண்டு வருமென திடம் கொள்வோம்.
ஆண் பெண் எனும் பேதமற்று, இளமை முதிர்மை என்ற வேறுபாடின்றி, கொத்துக் கொத்தாக கொன்றொழிக்கப்பட்ட எமது இனத்தின் துயர் பற்றியும், இன்னும் ஆறாத வடுக்களோடு மாற்றுத் திறனாளிகளாய் வாழுவோர் நிலைபற்றியும், சிறைப்பிடிக்கப்பட்டு இன்னும் விடுதலை இன்றி சிறைக்கூடங்களில் வாழ்வோர் பற்றியும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் பற்றியும், தாய் தந்தையை இழந்த சிறார்கள் பற்றியும், மே மாதம் முழுவதும் நீதியை வேண்டி எழுப்புதல் செய்வோம்.
உலக நாடுகளின் உதவிக் கரம் கொண்டு 2009ல் சிறீலங்கா இனவாத அரசு எங்கள் தாய்நிலத்தில் நிகழ்த்திய நரபலியெடுப்பின் சொந்தக்காரன் மீண்டும் அரசேறியுள்ளான். எம் துயரும், கொடும் வலியும் இனிப் பேச்சற்றதாகிப் போய்விடுமோ எனும் பெரும் அச்சம் நிலவும் தருணமிது. எங்கள் வலிகளை மறைக்கவும், எமது அரசியல் அபிலாசைகளையும், வீர வரலாறுகளையும் குழிதோண்டிப் புதைப்பதிலும் தீவிரம் காட்டுகிறார் என்பதை உணர்கிறோம். எனவே நாம் விழிப்படைய வேண்டும்.
பாதுகாப்பான நாடுகளில் வாழும் நம்மைத் தவிர, எமக்கான நீதிவழிப் பயணத்திற்கு பிறிதொரு இனம் தானாகவே முன்வராது என்பது திண்ணம். ஆனால் அந்நிய இனங்கள் யாவையும் எம்மைத் திரும்பிப் பார்க்கச் செய்யும் பொறுப்பும், தகமையும் எமக்கே உரித்தாகிறது. அதன் அடிப்படை ஆதாரத் தளமாக ஆண்டின் மே மாதம் முழுவதும் உணர்வை முன்னிறுத்தி, ஆடம்பர மற்றும் களியாட்ட நிகழ்வுகளைத் தவிர்ப்போம். நீதியை வேண்டி நிற்போம்.
குருதி தோய்ந்து இன்னும் கறைபடிந்து கிடக்கும் மே மாதம் முழுவதும் ஒட்டுமொத்த தமிழர்களும் எங்கள் வலிகளை, வேதனைகளை திடமான நீதி கோரலுக்காய் பயன்படுத்துவோம், தனிக்குடும்பங்களாகவோ, குழுமங்களாகவோ நிகழ்த்தும் ஆடம்பர நிகழ்ச்சிகளைத் தவிர்ப்போம். பொது மண்டபங்களில் நிகழ்த்தும் களியாட்ட நிகழ்வுகளை முன்கூட்டியே மே மாதத்தில் இருந்து தவிர்த்து திட்டமிடுவோம். இத்தகைய தொடர் அடையாளமிடல் என்பது என்றோ ஒருநாள் நீதியின் கண்கொண்டு எம்மைத் திரும்பிப் பார்க்க உலக ஆட்சியாளர்களுக்கு இயற்கை ஆணை பிறப்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை, ஏனெனில் நாங்கள் செய்துள்ள தியாகங்கள் அறத்தின், நீதியின்பாலானது.
புலம்பெயர் தேசத்தில் வாழும் தாயக உறவுகளின் அடையாளமிடலாக இது அமைந்தாலும், ஒரு இறுக்கமான சமுதாயக் கட்டுப்பாட்டையும், ஒழுக்கத்தையும் பின்பற்றி வாழ்ந்து இப்போது அது சரிந்து போன அல்லது தகர்ந்து போன நிலையில் காணப்படும் எங்கள் தாய்த்தேச வளர் சமூகத்தையும் மீண்டும் ஒழுக்கத்தில் நிரல்ப்படுத்தும் என்றும் வீண் போகா நம்பிக்கை கொள்வோம்.
எங்கள் இன விடுதலைப் போராட்டத்திற்கு இதுவரை காலமும் நீங்கள் ஒவ்வொருவரும் நல்கிய பேராதரவின் அடையாளமும், தாராள மனப்பாங்கும் பன்மடங்காக அதிகரிக்குமென நம்பிக்கையும் உரிமையும் கொண்டு, புலரும் புதிய ஆண்டின் மே மாதம் தொடக்கம் இனிவரும் ஒவ்வொரு ஆண்டிலும் மே மாதம் முழுவதும் ஆடம்பரமான, களியாட்டமான நிகழ்வுகளைத் தவிர்த்து, உலகப் பரப்பெங்கும் ஓர் முன்னுதாரண நிலையினைத் தோற்றுவிப்போமென உறுதி கொள்வோமாக.
நன்றி.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.