சிறிலங்கா இனவழிப்பு அரசின் தொடந்து வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு அம்சமாக எமது பாரம்பரியமான சித்திரப் பட்ட திருவிழாவினை ஆக்கிரமித்து அவர்களின் இன நல்லிணக்க வேடத்துக்குள் அடக்கியுள்ளது என கனடா ஒருங்கிணைந்த ப்ளூஸ் விளையாட்டுக் கழகங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறிலங்கா அரசின் தமிழர் இனப்படுகொலைக்கு திட்டமிட்டு வெள்ளையடிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தமிழின துரோக செயல்களை வன்மையாக கண்டிக்கின்றோம்.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தன்னிலை விளக்க அறிக்கையினை பார்த்து வெட்கித் தலை குனிகின்றோம்.
பெருமையும் வீரமும் செறிந்த வல்வை மண் இவர்களின் செயற்பாட்டால் வேதனை கொண்டுள்ளது. சிறிலங்கா இனவழிப்பு அரசின் தொடந்து வரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பின் ஒரு அம்சமாக எமது பாரம்பரியமான சித்திரப் பட்ட திருவிழாவினை ஆக்கிரமித்து அவர்களின் இன நல்லிணக்க வேடத்துக்குள் அடக்கியுள்ளது.
தமிழர்கள் ஒரு தனித்துவமான இனக்குழுமம். எங்களை யாரின் அங்கீகாரத்திற்காகவும் ஏங்கவிடாமல், எந்த அதிகாரத்திற்கும் அடிபணியாமல் எமது விடுதலைப் போராட்டத்தை கொண்டு நடத்திய மாபெரும் தலைவன் அவதரித்த மண்ணில் இனப்படுகொலை அரசு காலூன்றுவது என்பது மாவீரர்களையும், அவர்களின் நிகரில்லா ஈகத்தையும் கொச்சைப்படுத்துவதே அன்றி வேறேதுமில்லை.
வல்வை விக்னேஸ்வரா சனசமூக சேவா நிலையம் மற்றும் வல்வை உதய சூரியன் கழக நிர்வாகத்தினரின் தன்னிலை விளக்க அறிக்கையின் படி, இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சினுடாக எமது பாரம்பரியகலாசார நிகழ்வான இந்த சித்திரப்பட்டப் போட்டி பன்முகப்படுத்தப்பட்டு , பல நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் முன்னிலையில் இலங்கை அரசின் மிகப்பெரிய நல்லிணக்க நாடகத்தின் கடைசிக் காட்சியாக இடம்பெறப் போகின்றது என்பது மிகவும் வேதனை அளிக்கின்றது.
விடுதலைப்போராட்டம் தொடங்கிய இடத்திலேயே இதனை நடத்திக் காட்டுவதன் மூலம் எமது இனத்திடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையையும் அடித்து நொறுக்கும் முயற்சியாகவே நாம் இதை பார்க்கின்றோம்.
இலங்கை அரசின் அற்ப சொற்ப சலுகைகளுக்காக இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்ட அமைப்புகளை கனடா வாழ் வல்வை மக்களின் அங்கமாகிய டொரோண்டோ ப்ளூஸ் மற்றும் மொன்றியல் ப்ளூஸ் விளையாட்டு கழகங்கள் ஆகிய நாம் ஒன்றிணைந்து கண்டிப்பதோடு மட்டுமல்லாமல் இந்த விடயத்தை எக் காரணத்தை கொண்டும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்துகின்றோம்.
பாரம்பரியம் மிக்க விளையாட்டுக் கழகமான உதய சூரியன் கழகத்தின் நிகழ்கால இளம் தலைவர்களின் சிறிலங்கா அரசுடனான இணைக்கப் போக்கே இனவழிப்பு அரசை எமது பெருமை மிகு வல்வை மண்ணில் இந்த நாடகத்தை நடத்த இடம்கொடுத்துள்ளது.
இச் செயலானது ஒரு பெரும் அரசியல் மற்றும் உளவியல் தோல்வியை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் இலங்கை அரசுக்கு சர்வதேச மட்டத்தில் பாரிய அங்கீகாரத்தினை பெறுவதற்கு உந்துகோலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
மேலும், எம் வல்வை மக்களின் இன்ப துன்பங்களில் தொடர்ந்து பங்கெடுத்து, தங்களின் உழைப்பினால் அவர்களை தினமும் மேம்படுத்திக் கொண்டிருக்கும் புலம்பெயர்ந்த மக்களின் மனங்களை இந்நிகழ்வானது மிகவும் புண்படுத்தி உள்ளது.
இவ் விடயத்தின் பாரதூரமான விளைவுகளை புரிந்து கொண்டு, ஏற்பாட்டாளர்கள், போட்டியாளர்கள், மற்றும் எம் இனிய வல்வை மக்கள் முன்வந்து தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்யுமாறும் அவர்கள் மறுக்குமிடத்து இந்நிகழ்வை புறக்கணிக்குமாறும் உரிமையோடு வேண்டிக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.