ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழைப்பை ஏற்று, தீா்வுக்கான முயற்சிகளில் அவருடன் தொடர்புகளைப் பேண தயாராக இருப்பதாக புலம்பெயர் தமிழர் அமைப்பான உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்துள்ள அழைப்பு முற்போக்கான ஒரு நடவடிக்கை என உலகத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளதாக கொழும்பு கெசட் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸை நியூயோர்க்கில் சந்தித்துப் பேசினார். இதன்போது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனைகளை உள்ளக பொறிமுறை மூலம் தீர்க்கப்பட வேண்டும் எனக் கருத்து வெளியிட்டார்.
அத்துடன், இது தொடர்பில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுடன் கலந்துரையாடத் தயாராக உள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையிலேயே தமிழ் புலம்பெயர் மக்களுடன் மக்களுடன் இணைந்து செயற்படத் தயராக உள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளமை நிச்சயமாக ஒரு முற்போக்கான நடவடிக்கை. அதை நாங்கள் வரவேற்கிறோம் என உலகத் தமிழர் பேரவை செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்பு, மார்ச் 2021 இல் உலகத் தமிழர் பேரவை உள்ளிட்ட பல முக்கிய புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு தடை விதித்து இலங்கை அரசாங்கம் வர்த்தமானி வெளியிட்டது. இந்நிலையில் ஜனாதிபதியின் இந்த திடீர் மனமாற்றம் எவ்வாறு ஏற்பட்டது? எனவும் அவா் கேள்வி எழுப்பினார்.
இந்த அரச நிர்வாகத்தின் தவறான ஆலோசனையால் எங்களை தடைசெய்ததற்காக இலங்கை மக்களுடனான அதன் ஈடுபாடுகளை உலகத் தமிழர் பேரவை நிறுத்தவில்லை. சமீபத்தில் கூட, கோவிட் 19 தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் உதவும் வகையில் பல மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை நாங்கள் ஏற்பாடு செய்தோம். நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமல்ல, முழு இலங்கைக்கு இவ்வாறான உதவிகளைச் செய்தோம் எனவும் உலகத் தமிழர் பேரவை செய்தித் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன் கூறினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2015 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை லண்டனிலும் 2016 பேர்லினில் ஒரு முறையும் உலகத் தமிழர் பேரவை சந்தித்ததாகவும் அவா் சுட்டிக்காட்டினார்.
எங்கள் மக்களின் பிரச்சினைகளை மட்டுமன்றி இலங்கையின் அனைத்து மக்களின் குறைகளையும் தீர்க்க தாயராக இருந்தால் நாங்கள் யாருடனும் பேசத் தயாராக இருக்கிறோம் எனவும் உலகத் தமிழர் பேவை செய்தித் தொடர்பாளர் மேலும் கூறினார். ஜனாதிபதி பேச விரும்பும் உள்நாட்டு பொறிமுறையைப் பொறுத்தவரை நீதித்துறை சாராத செயல்முறைகள் மற்றும் வழிமுறைகள் குறித்து விவாதிப்பது மகிழ்ச்சியளிக்கும்.
ஆனால் நீதித்துறை சார் பொறிமுறைகளைப் பொறுத்தவரையான செயற்பாடுகள் எவ்வாறு அமைய வேண்டும்? என்பதை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்பேரைவ 30/1 தீா்மானம் விவரிக்கிறது எனவும் அவா் குறிப்பிட்டார்.
இதேவேளை நல்லிணக்கம் என்ற நாசகார வலைக்குள் தமிழ்த்தேசியக்கூட்டமைப்போடு சேர்ந்து வீழ்ந்து தமிழ் மக்களின் அரசியல்ப்போராட்டத்தினை அடிவருடி அரசியலாக மாற்றிய பெருமை உலகத்தமிழர் பேரவை மற்றும் சில புலம்பெயர் அமைப்புகளையும் சாரும் என்பது குறிப்பிடத்தக்கது.