இனப்படுகொலையாளி பொன்சேகா எனக்குப் புத்திமதி சொல்வது விசித்திரமானது. கஜேந்திரகுமார் பதிலடி!!

You are currently viewing இனப்படுகொலையாளி பொன்சேகா எனக்குப் புத்திமதி சொல்வது விசித்திரமானது. கஜேந்திரகுமார்  பதிலடி!!

இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற குறை நிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

பிரதிக் குழுக்களின் தலைவர் அவர்களே,

பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் இவ்விவாதத்தில் ஆற்றிய கருத்தொன்றிற்கு பதிலளிக்க நான் விரும்புகின்றேன்.

இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பேணுவதற்காக நான் தெரிவிக்கும் கருத்துக்களில் கவனமாய் இருத்தல் அவசியம் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா அவர்கள் குறிப்பிட்டிருந்தார். நான் அவருக்கு கூற விரும்புவது நான் எனது கருத்துக்களை மிகவும் எச்சரிக்கையுடனும் அளந்துமே தெரிவித்து வருகிறேன்.

எனக்கு அவரது அறிவுரை ஆச்சரியத்தை தருவதோடு விநோதமாயும் உள்ளது. இதே சரத் பொன்சேகா முன்னொரு காலத்தில் இராணுவத் தளபதியாக பரிணமித்திருந்த வேளையில், இலங்கை ஒரு சிங்கள பௌத்த மரமெனவும், அந்த மரத்தில் பற்றிப் பரவும் கொடிகளே ஏனைய இனங்கள் எனவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
தான் ஒரு இனவாதி இல்லை என காட்டிக்கொள்ள முயலும் ஒருவரின் வார்த்தைகள் அல்ல இவை. ஒரு வேளை அந்த பதவி பறி போய், சிறையிலடைக்கப்பட்ட பின்னர் மாறிவிட்டார் போலும். இனவாதத்தை கக்கிய அவர் எனக்கு இந்த அறிவுரையை கூறுவது விசித்திரமாக உள்ளது.

மதிப்பிற்குரிய பிரதிக் குழுக்களின் தலைவர் அவர்களே,

வடக்கு கிழக்கானது ஒரு யுத்தத்தை எதிர்கொண்ட பிரதேசம் என்பதை தங்கள் அறிவீர்கள்.

அந்த பிரதேசமானது வேண்டுமென்றே அழிக்கப்பட்டது.
32 வருடங்களாக நாம் ஒரு யுத்தத்தை எதிர்கொண்டோம். அவ்வேளையில் இராணுவ தளபதியாக சரத் பொன்சேகா பதவி வகித்த போது வடக்கு கிழக்கின் பல பிரதேசங்கள் மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருந்தது.
அக்காலத்தில் ஒரு லீற்றர் பெற்றோல் 1500 ரூபாய் ஆக காணப்பட்டது. இதுவே வட- கிழக்கில் காணப்பட்ட நிலவரம்.

32 வருட முழுமையான அழிவின் பின்னர் வடக்கு கிழக்கினை இத்தீவின் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுவது அபத்தமானது.

அப்பொருளாதாரம் 32 வருடங்கள் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்றது. இலங்கையின் ஏனைய பகுதிகளுக்கு ஈடாக வடக்கு- கிழக்கு போட்டியிட வேண்டும் என எதிர்பார்க்க முடியாது. ஆகையால், வடக்கு- கிழக்கு பிரதேசமானது ஒருமித்தும் இத்தீவின் ஏனைய பிரதேசங்களினை விட வேறாகவும், தனித்தும் நோக்கப் பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அப்பிரதேசத்திற்கு விசேட சலுகைகள் வழங்கப்படல் வேண்டும்.

இந்த பொருளாதார நெருக்கடி காரணமாக மிகுந்த அவலத்திற்குள்ளானவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களே. காரணம், காணாமல் ஆக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் அவர்களது குடும்பங்களிற்கான பொருளீட்டுநர்களாகவே இருந்தனர்.

இவர்களது குடும்பங்கள் இன்று மிகவும் அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
கடந்த 4 வருடங்களாக இச்சொந்தங்கள் போராடி வருகின்றனர்.

ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தினம் அனுட்டிக்கப்படவிருக்கின்றது. அவர்களது போராட்டங்களுக்கு நாம் பூரண ஆதரவை வழங்குகின்றோம்.

அவர்களுக்கான நீதி கிடைக்க வேண்டுமானால் அதற்கான ஒரே வழி நீதிக்கான ஒரு சர்வதேச விசாரணையாகும்.
இதற்காக நாம் தொடர்ந்தும் குரல் கொடுப்போம். அதுவே நமக்கு வழங்கப்பட்ட ஆணையுமாகும்.

இதே போன்று தமிழ் அரசியல் கைதிகளும் அவர்களது குடும்பங்களின் பொருளீட்டுநர்களாக இருந்தவர்கள். வருடக்கணக்காக அவர்களுக்கு நீதி கிட்டவில்லை. குற்றவாளிகளுக்கு போது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்படுமோது, அரசியல் கைதிகள் எதுவித சாட்சியங்களும் இன்றி தொடர்ந்தும் சிறையில் அடைக்கப்பட்டிருத்தல் மாபெரும் அநீதியாகும்.

பகிர்ந்துகொள்ள