“ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இனப்படுகொலையை தடுக்க வேண்டும்” – மியான்மருக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவு
ரோஹிஞ்சா முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் தொடர்பாக கடந்த மாதம் சர்வதேச நீதிமன்றத்தில் மியான்மரின் நடைமுறைத் தலைவர் ஆங் சான் சூச்சி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு மியான்மரில் எடுக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையின்போது ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சாக்கள் கொல்லப்பட்டனர். 7 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வங்க தேசத்துக்கு தப்பிச்சென்றனர். இந்த இனப்படுகொலை நடவடிக்கைகள் மீண்டும் நிகழலாம் என ஐநா விசாரணையாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ரோஹிஞ்சா மக்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக முஸ்லிம்கள் பெரும்பான்மையாக கொண்ட ஆப்பிரிக்க நாடான காம்பியா, சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இருப்பினும்.ரக்கைன் மாகாணத்தில் இருந்த தீவிரவாத அச்சுறுத்தலை தடுக்கவே ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டதாக மியான்மர் தரப்பு கூறிவந்தது.
சர்வதேச நீதிமன்றத்தில் ஆஜரான ஆங் சான் சூச்சி, அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலையங்களை, ரோஹிஞ்சா போராளிகள் தாக்கியதால் தூண்டப்பட்ட ‘உள்நாட்டு மோதல்’ என்று மியான்மரில் நடந்த வன்முறையை விவரித்திருந்தார்.
மியான்மர் அரசாங்கத்துக்குட்பட்ட அதிகாரத்தை பயன்படுத்தி, இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்ற அமர்வில் இருந்த 17 நீதிபதிகள் ஒருமனதாக உத்தரவு பிறப்பித்தனர். ரோஹிஞ்சாக்கள் அபாய நிலையில் இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
ஆங் சான் சூச்சி நெதர்லாந்தில் உள்ள சர்வதேச நீதிமன்றத்துக்கு சென்று நேரில் ஆஜராக வேண்டும் என்ற தேவை இருக்கவில்லை. எனினும், அவரே நேரில் செல்ல வேண்டும் என்ற முடிவை எடுத்தார். எந்த கும்பல் கொலையும், பாலியல் வல்லுறவும், கலவரமும் நடைபெறவில்லை என்று வாதிட்டார். இருப்பினும் ரோஹிஞ்சா முஸ்லிம்களின் இனப்படுகொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச அளவில் ஆங் சான் சூச்சிக்கு இருந்த சிறியளவு மரியாதையையும் சர்வதேச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அழித்துவிட்டது.