இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற யுத்தத்தை இனப்படுகொலை என கனடா பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ மீண்டும் தெரிவித்தமையை வன்மையாகக் கண்டிப்பதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு கடந்த சனிக்கிழமை ஜஸ்ரின் ட்ரூடோ வெளியிட்ட அறிக்கையில் இனப்படுகொலை தொடர்பில் முன்வைத்த கருத்துகள் தவறானவை என வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிரான போர் நிறைவடைந்த மே 18ஆம் திகதியை தமிழர்கள் இனப்படுகொலை நினைவேந்தல் தினமாக அங்கீகரிப்பதற்கான தீர்மானத்துக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் கனடா பாராளுமன்றம் ஏகமனதாக வாக்களித்ததாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு வெளியிட்ட அறிக்கையில் அந்த நாட்டு பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையில் இலங்கையில் முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களும் இனப்படுகொலை தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ந்து நிராகரித்து வந்தன என்று வெளிவிவகார அமைச்சு குறிப்பிடப்பட்டுள்ளது. கனடாவின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் ஐ. நா. கொள்கைகளுக்கு மாறாக, தனிநாடு கோரி விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட ஆயுதப் போருடன் தொடர்புடையது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு கனடா உள்ளிட்ட உலகளாவிய ரீதியில் 33 நாடுகளில் பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்குறித்த ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து, வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும். அனைத்து சமூகங்களையும் சேர்ந்த சிங்களவர்கள், தமிழர்கள்
உள்ளிட்ட அனைவரும் இலங்கையில் நடைபெற்ற மோதலால் பாதிக்கப்பட்டவர்கள். இந்த நிலையில், கனடா பிரதமர் வெளியிட்ட கருத்து இலங்கையர்கள் மத்தியில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் முன்னேற்றத்துக்கான இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை சீர்குலைக்கும் வகையில் இருக்கிறது என்றும் வெளிவிவகார அமைச்சு சாடியுள்ளது.