இதுகுறித்து வடக்கு, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
தமிழ்மக்களுக்கு எதிராக இனவழிப்பை மேற்கொண்டுவரும் சிங்களப்பேரினவாதமானது மனிதப்புதைகுழிகளையே தமிழ்மக்களுக்குப் பரிசாகக் கொடுத்துள்ளது.
செம்மணியில் ஆரம்பித்த மனிதப்புதைகுழி இன்று கொக்குத்தொடுவாய் வரை நீண்டுள்ளது. 1984 ஆம் ஆண்டின் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கொக்குத்தொடுவாய் பிரதேசத்தில் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டதன் பின்னரே மக்கள் குடியேற்றப்பட்டனர்.
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப்புதைகுழி தொடர்பான வழக்கு நீண்டகாலமாக உண்மை கண்டறியப்படாமல் இலங்கைப் பேரினவாத அரசின் நீதித்துறையால் மூடிமறைக்கப்பட்டுவருகின்றது.
எனவே முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியில் உள்ள மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் சர்வதேச நியமத்தின்படி, சர்வதேசக் கண்காணிப்புடன் முன்னெடுக்கப்படவேண்டும்.
அதுமாத்திரமன்றி தற்போதும் தமிழ்மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்பைத் தடுப்பதற்கு சர்வதேச சக்திகள் அழுத்தம் பிரயோகிக்கவேண்டும்.
குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான சர்வதேச விசாரணைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுவதுடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்படவேண்டும். இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்ட தமிழ்மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் விடுவிக்கப்படவேண்டும். நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் எவ்வித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்யப்படவேண்டும்.
மேலும் தமிழ்மக்கள் செறிந்துவாழும் வட, கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்றுவரும் பௌத்த சிங்களமயமாக்கல் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொல்லியல் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்படல் என்பன முடிவுக்குக்கொண்டுவரப்படவேண்டும். ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் நிறுத்தப்படவேண்டும். இவையனைத்தும் உரியவாறு நிறைவேற்றப்படும் பட்சத்தில்தான் அரசியல் தீர்வை நோக்கி நகரக்கூடிய புறச்சூழ்நிலை உருவாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.