சிங்கள கடும்போக்கு இனவாதியும் நாடாளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகரவிற்கு வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியில் வந்து கதையுங்கள் பார்ப்போம் எனப் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர நாடாளுமன்றத்தில் இருந்துகொண்டு கதைக்காமல் தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தை விட்டு வெளியில் வந்து கதைக்குமாறு வவுனியா மாவட்ட சட்டத் தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
முல்லைத்தீவு நீதிமன்ற நீதவான் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர கடந்த (22.08.2024) அன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்து வவுனியா சட்டத்தரணிகள் சங்கத்தால் ஒரு மணிநேர பணிப் புறக்கணிப்பும் ஆர்ப்பாட்டமும் இன்று (25.08.2023) முற்பகல்-09.30,மணிதொடக்கம் 10.30,மணிவரை வவுனியா மாவட்ட நீதி மன்றம் முன்பாக முன் னெடுக்கப்பட்டது.
இதன் போது கருத்துத் தெரிவிக்கையிலேயே வவுனியா மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் அன்ரன் புனித நாயகம் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர் நிலுவையில் உள்ள குருந்தூர்மலை தொடர்பான வழக்கை விசாரித்து வரும் நீதிபதியினைப் பாதிக்கும் வகையிலான கருத்தினை நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார் இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அவரது உரை தொடர்பில் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத் தலைவருக்கு முகவரியிடப் பட்டு சனாதிபதி மற்றும் நீதியமைச்சர்,நீதிச்சேவைகள் ஆணைக்குழு ஆகியவற்றிற்கு அதன் பிரதிகளை அனுப்ப இருக்கின்றோம்.
இந்தக் கடிதமானது வடக்குக் கிழக்கில் அமைந்துள்ள அனைத்துச் சட்டத்தரணிகள் சங்கம் சார்பிலும் அனுப்பப்பட
உள்ளது என்றார்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் நீதியான சட்ட ஆட்சியை நடைமுறைப் படுத்து
வதைத் தடுக்காதே, அரசியல்வாதிகளே நீதிபதிகளைச் சுதந்திரமாகச் செயற்பட விடுங்கள்,நீதிபதிக்கு மரியாதை கொடுங்கள்,நீதித்துறையில் அரசியல்த் தலையீடு ஏன்,போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி இருந்தனர்.