அமெரிக்கா என்பது இனவாதமும், நிறவாதமும் நிறைந்த நாடு என்றும், அது இனவாத அதிபரால் ஆளப்படுகிறது எனவும், நோர்வேயை சேர்ந்த நிபுணரான”Eirik Bergesen” கருத்துரைத்திருக்கிறார். அமெரிக்கா தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டுவரும் இவர் தெரிவித்திருக்கும் அமெரிக்கா மீதான கடுமையான கருத்துக்கள், அமெரிக்காவெங்கும் இனவாதம் மற்றும் நிறவாதத்துக்கு எதிரான போராட்டங்கள் கொழுந்துவிட்டெரியும் இந்நிலையில் முக்கியத்துவம் பெறுகின்றன.
காரணம் எதுவாயினும், ஒரு கறுப்பினத்தவரை கைது செய்ய முனையும் காவல்துறையை சேர்ந்த வெள்ளையின அமெரிக்கர் ஒருவர், குறித்த கறுப்பினத்தவரின் கழுத்தில் இயல்பாக சுவாசிக்க முடியாதளவுக்கு தனது முழங்காலால் சுமார் 10 நிமிட நேரம் அழுத்தி வைத்திருந்ததையும், அதனை மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்ததோடு, அந்த கொடுஞ்செயலை காணொளிகளாக படம்பிடித்ததையும், மூச்சுத்திணறலால் குறித்த கறுப்பினத்தவர் மரணமடைந்ததையும் கடுமையாக சாடியுள்ளார் மேற்படி நோர்வே ஆய்வாளரான “Eirik Bergesen”.
கறுப்பினத்தவர் ஒருவர் தெருவோரமாக ஓடிச்செல்வதை காணும் வெள்ளையினத்து அமெரிக்கர்கள், தெருவோரமாக ஓடும் கறுப்பினத்தவர் உடற்பயிற்சிக்காக கூட ஓடலாமென்ற சிந்தனையில்லாமல், அவர் குற்றசெயலொன்றை செய்துவிட்டு ஓடித்தப்புகிறாரென உடனடியாக முடிவு செய்வதை குறிப்பிடும் நோர்வே ஆய்வாளர், சட்டத்தை அவ்விடத்தியிலே கையிலெடுக்க முனையும் வெள்ளையினத்தவர்கள், குறித்த கறுப்பினத்தவரை நடுத்தெருவில் வைத்து கொலைகூட செய்யுமளவுக்கு அமெரிக்காவில் நிலைமைகள் உள்ளதை சாடுகிறார்.
குறிப்பாக, தெருவில் செல்லும் ஒரு கறுப்பினத்தவரை வெறுக்கும் வெள்ளையின பெண்ணொருவர், குறித்த அந்த கறுப்பினத்தவரிடம் தனது நாயை சற்றுநேரம் பாதுகாத்துக்கொள்ளும்படி வேண்டிக்கொண்டுவிட்டு, உடனடியாகவே காவல்துறையை அழைத்து, குறித்த அந்த கறுப்பினத்தவர் தன்னை தாக்கினார் என முறையிடும்போது, அந்த நபர் கறுப்பினத்தவர் என்ற கரணம் மட்டுமே அங்கு கைதுக்கான போதுமான காரணியாக இருப்பதை ஆய்வாளர் மேலும் குறிப்பிடுகிறார்.
மேற்படி சம்பவங்கள் சில எடுத்துக்காட்டுக்கள் மட்டுமே எனவும் குறிப்பிட்டுள்ள அவர், இவ்வாறான பல சம்பவங்களில் மிகச்சிலவே காணொளியாக பதிவு செய்யப்பட்டு பரப்பப்படுகிறது எனவும் குறிப்பிடுகிறார்.
“கொரோனா” வைரஸின் தாக்கத்தால் சுமார் ஒரு இலட்சம் மரணங்களை அமெரிக்கா சந்தித்திருந்தாலும், இம்மரணங்களில் சுமார் 60 சதவீதமான மரணங்கள், கறுப்பினத்தவர்கள் அதிகமாக செறிந்து வாழும் பகுதிகளிலேயே நிகழ்ந்துள்ளதாக குறிப்பிடும் “Eirik Bergesen”, கறுப்பின மக்களிடையேயான மிக மோசமான சுகாதார திடமின்மை, மிகமோசமான சுகாதார கேடுகளை விளைவிக்கும் தொழில்களையே மேற்கொள்ளும் இக்கட்டான நிலையில் அவர்கள் வாழ்வது, தொழில்வாய்ப்பின்மை மற்றும் வெள்ளையின அமெரிக்கர்களுக்கு கிடைக்கும் உயர்தர சுகாதார வசதிகள் கிடையாமை போன்ற காரணிகளின் எதிர்விளைவுகளும் இப்போது நடக்கும் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்களுக்கான காரணங்களில் ஒன்றாக சேர்த்துக்கொள்ளப்படலாமெனவும் கருதுகிறார்.
இனவாதிகளென்றும், நிறவாதிகளென்றும் அடையாளப்படுத்தப்படும் வெள்ளையினத்தவர்கள், இனவாத மற்றும் நிறவாத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இதுவரை காலமும் அவர்கள் மேற்கொண்டு வந்த, தம்மை உருமறைப்பு செய்யும் காரியத்தை முற்றாக விடுத்து, தாம் யாரென்ற அடையாளத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டு கறுப்பின மக்களுக்கெதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை சுட்டிக்காட்டும் “Eirik Bergesen”, நாட்டின் தற்போதைய அதிபர் தங்களை பாதுகாப்பார் என்ற நம்பிக்கையும், இவ்வாறான செயல்களை செய்பவர்களை “Good People / மிக நல்ல மனிதர்கள்” என அதிபர் பாராட்டுவாரென்ற நம்பிக்கையும் அவர்களிடத்தில் ஆழப்பதிந்திருக்கிறது எனவும் சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது அமெரிக்காவில் பரவிவரும் போராட்டங்கள் தொடர்பில் “Twitter” வலைத்தளத்தில் அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்த கருத்துக்கள், மென்மேலும் குழப்பங்களை உண்டாக்குமெனவும், அதிபரின் கருத்துக்கள் நிதர்சனத்துக்கு புறம்பானவையெனவும் “Twitter” நிர்வாகம் கண்டித்ததால், “Twitter” நிர்வாகத்தின்மீது வழக்கு தொடுக்க அதிபர் டிரம்ப் முனைவதையும் …
அமெரிக்க உதைபந்தாட்ட அணியைச்சேர்ந்த கறுப்பின வீரர் ஒருவர், மைதானத்தில் அமெரிக்க தேசியகீதம் ஒலித்தபோது, முழங்காலில் மண்டியிட்டு, கறுப்பினத்தவர்கள் மீதான இனவெறித்தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், அவ்வீரர்மீது அதிபர் டிரம்ப் காட்டமடைந்ததையும் …
தற்போது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதற்கான காரண காரணிகளை கண்டறிந்து அவற்றை தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, நிற, இன பேதமேதுமில்லாமல் அனைவரும் அமெரிக்கர்களே என்ற ஒற்றுமையை வளர்த்தெடுப்பதை அதிபர் டிரம்ப் புறந்தள்ளி வருவதையும் கடுமையாக சாடியுள்ள நோர்வே ஆய்வாளரான “Eirik Bergesen”,
அமெரிக்க மக்களிடையே வெள்ளை / கறுப்பு என்ற பேதம் இருப்பது தனக்கான அரசியல் எதிர்காலத்துக்கு முக்கியமானது என அதிபர் டிரம்ப் கருதுகிறார் என்பதாலும், மேட்கூறப்பட்ட காரணங்களாலும் அமெரிக்கா என்பது, இன / நிறவாத அதிபரால் ஆளப்படும் இன / நிரவாத நாடு என தான் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
வெளியிணைப்பு: