கடந்த 2019 மார்ச் அமர்விலே ஸ்ரீலங்காவுக்கு 30/1 தீர்மானத்தை அமுல்படுத்த மூன்றாவது தடவையாகவும் இரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் அந்த கால அவகாசத்தை எதிர்த்தாலும் கூட தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கால அவகாசத்தை வழங்குமாறு கோரியதன் பேயரிலேயே பாதிக்கப்பட்ட மக்களுடைய விருப்பத்தை மீறி அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
அவ்வேளையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிபால – ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு சர்வதேசம் அழுத்தம் கொடுத்தால் போர் குற்றவாளிகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு. அதன் மூலம் சிங்கள மக்களின் எதிர்ப்பை சந்தித்து தேர்தலில் தோல்வியை சந்திக்கும் நிலை ஏற்படுமென்ற காரணத்தை கூறியது. அத்துடன் அரசாங்கம் தோல்வியை சந்தித்தால் ராஜபக்ஷ அணி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறுமென்ற விடயத்தையும் அவர்கள் வலியுறுத்தினர் இதன் மூலம் பொறுப்பு கூறலை விட ராஜபக்ஷ தரப்பை ஆட்சிப்பீடம் ஏறுவதை தவிர்ப்பது தான் முக்கியமென கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருந்தது. அவர்களுடைய அணுகு முறையினால் கடந்த 6 வருடமாக பொறுப்பு கூறுதலிலிருந்து ராஜபக்ஷ தரப்பை காப்பாற்றப்பட்டது. மட்டுமல்லலாமல் எந்த தரப்பை தவிர்க்க விரும்பினார்களோ அதே தரப்பு வெற்றி பெற்று ஆட்சியமைத்ததே நடந்தேறியுள்ளது.
இதே வேளை ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ 30/1 தீர்மானத்தை ஏற்க தயாரில்லையென பகிரங்கமாக அறிவித்துள்ளார். மேற்படி தீர்மானத்தை அதன் முதல் வருடம் இந்த மார்ச்சுடன் நிறைவடைகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதி தீர்மானித்தை ஏற்கமாட்டேன் என கூறியுள்ளதால் இனியும் ஸ்ரீலங்காவுக்கு கால அவகாசம் வழங்கத் தேவையில்லை. இந்த விடயத்தை தான் ஐ.நா. மனித உரிமை பேரவையிலுள்ள உறுப்பு நாடுகளிடம் நாம் வலியுறுத்தி வருகின்றோம்.
2012 லிருந்து ஐ.நா. மனித உரிமை பேரவையில் தமிழ் மக்களின் பொறுப்பு கூறுதல் விடயம் முடக்கப்பட்டு வருகின்றது. பேரவையில் இருக்க கூடிய மிகப் பெரிய பலவீனம் கா எந்த நாட்டுக்கு எதிராகவும் தீர்மானம் மேற்கொண்டாலும் அந்த நாட்டினுடைய சம்மதமின்றி நிறைவேற்ற முடியாததாகும். ஸ்ரீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30 /1தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது என ஐனாதிபதி கூறியிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் பொறுப்பு கூறுதலை பேரவைக்குள் மட்டுப்படுத்தி வைப்பது மிகப்பெரிய அநியாயமாகவே கருத வேண்டும்.
இந்த வகையில் ஸ்ரீறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் இல்லையேல் சர்வதேச விசேட குற்றவியல் தீர்ப்பாயத்துக்கு முன் நிறுத்த வேண்டுமென எமது கட்சி வலியுறுத்தி வருகின்றது. இதே நிலைப்பாட்டை ஒட்டு மொத்த தமிழ் தரப்பும் கடைப்பிடிக்க வேண்டும்.