தமிழீழ ஒடுக்குமுறைக்கு சிங்களம் வித்திட்ட கல்வித் தரைப்படுத்தலை தமிழ் மாணவர்கள் மீது திணித்த போது ஒடுக்குமுறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடி இறுதியில் நஞ்சு (சயனைட்) அருந்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் மாணவன் பொன். சிவகுமாரனை நினைவுகூர்ந்து ஆண்டுதோறும் மாணவர் எழுச்சி நாளாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
முதல் தற்கொடையாளன் தியாகி பொன். சிவகுமாரனின் நினைவு நாளாகிய ஆனி (ஜூன்) 5 இல் உலக சூழல் நாள் வருவதால் அதற்கு மதிப்பளித்து ஆனி (ஜூன்) 6ம் நாள் சிவகுமாரன் நினைவாக தமிழீழ மாணவர் எழுச்சி நாள் தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் கொண்டாடப்படுகின்றது.
* “எமது விடுதலைப் போராட்டம் கல்விக்கு கவசமாக இருப்பது போல், கல்வியும் எமது போராட்டத்திற்கு காப்பரணாக நிற்க வேண்டும்”
* எமது தேசத்தின் எதிர்காலச் சிற்பிகளாக ஒரு புதிய இளம் பரம்பரை தோற்றங்கொள்ள வேண்டும். ஆற்றல் மிகுந்தவர்களாக, அறிவுஜீவிகளாக தேசப்பற்றாளர்களாக போர்க்கலையில் வல்லுனர்களாக நேர்மையும் கண்ணியமும் மிக்கவர்களாக ஒரு புதிய புரட்சிகரமான பரம்பரை தோன்ற வேண்டும். இந்தப் பரம்பரையே எமது தேசத்தின் நிர்மாணிகளாக நிர்வாகிகளாக ஆட்சியாளர்களாக உருப்பெறவேண்டும்.
– தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.
தியாகி பொன். சிவகுமாரன் சாதிக்க முயற்சித்தவற்றை தமிழீழத் தேசியத்தலைவரும் அவர்தம் தோழர்களும் சாதித்தனர். இன்று அவரின் கனவான தமிழீழத் தாயகத்தை நோக்கி தமிழர்கள் வீறுநடைபோடவேண்டும்
இன்று மாணவர் சமூகம் பொங்குதமிழாய் உலகப் பரப்பெங்கும் பொங்கியெழுந்து தமிழீழத் தேசியத் தலைமையை வலுச்சேர்த்து நிற்கின்ற காலகட்டமிது. கடல்கடந்து வாழுகின்ற தமிழீழ மாணவர் சமூகத்தின் ஆதரவு தாயக நிர்மாணிப்பிற்கு இன்று பெருமளவு தேவையாக உள்ளது. காலம் இட்ட கட்டளையை நிறைவேற்ற வரலாறாகிப் போன மாணவப் போராளியின் நினைவுமீட்புநாளில் தாயகத்திற்கு வளம் சேர்க்க இளையதலைமுறையினர் அனைவரும் உறுதியெடுத்து, புலத்திலிருந்து தாயகம் நோக்கிய செயற்ப்பாடுகளை செய்ய வேண்டிய தருணமிது…