இன்றைய விடுதலை தீபங்கள்.

You are currently viewing இன்றைய விடுதலை தீபங்கள்.

இயக்கத்தின் ஆரம்ப கால போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆரம்ப கால சிறந்த போர்ப்பயிற்சி ஆசாண் மேஜர் செல்வராசா மாஸ்ரர்/அன்பு…!

“புலிகள் அமைப்பில் சிறந்த ஆளுமையுள்ள பல போராளிகளை உருவாக்கிய போர்ப்பயிற்சி ஆசான்”

இன்றைய விடுதலை தீபங்கள். 1

இப்பிடித்தான் 1990களில் சண்டைகள் இல்லாத நேரங்களில் அண்ணை தளபதி மாரை தான் நிக்கிற இடத்துக்கு கூப்பிட்டு ஏதாவது போட்டி நடக்கும். பெரும்பாலும் அது துப்பாக்கி சூட்டுப்போட்டியா தான் இருக்கும்.

ஒருநாள் ரெண்டு கையிலை, ரெண்டு துவக்கு தூக்கிர போட்டி ஒண்டை வைச்சார். உது ஈஸி தானே? எண்டு “ரம்போ” கணக்கா யோசிக்கக்கூடாது.
அவர் வச்ச போட்டி என்னண்டா.! ரெண்டு துவக்கை முன் நுனி பெரலில பிடிச்சு தூக்கி, நீட்டி வச்சிருக்கோணும்.! போட்டி SMG இல தொடங்கி,AK, SLR, எண்டு போய், கடைசியில இந்தியன்ற பிறண் LMG இல வந்து நிண்டிச்சுது.

போட்டியில எல்லாரும் தோத்து போக, ரெண்டு பிரண் LMG ஐ தூக்கி செல்வராஜா மாஸ்ட்டர் முதலாம் இடம் பிடிச்சார்.அவருக்கு 30- 9mm ரவுண்ஸ் பரிசா அண்ணையிட்டை இருந்து கிடைச்சுது.

இன்றைய விடுதலை தீபங்கள். 2

மாஸ்டர் அடிக்கடி பெடியளுக்கு உடம்பை இறுக்கோணும்! உடல் பயிற்சி செய்யுங்கோ எண்டு கத்திரத்தின்ற அர்த்தம் அண்டைக்கு விளங்கிச்சுது. எங்கட ஊர் “ரம்போ” எங்கட மாஸ்ட்டர் தானே.

பெடியள் ஏதாவது குழப்படி செய்தால் அண்ணை சொல்லுற வசனம், “செல்வராஜாட்டை ட்ரெயினிங் எடுத்திருந்த உந்தப்பிழை வந்திருக்காது” எண்டுவார். இதுவே மாஸ்ட்டரின் தகுதிக்கான விருது.

செல்வராசா மாஸ்ரர் இன் போராட்ட காலப்பகுதியின் முக்கிய நினைவில் இதுவுமொன்று அந்த காலப்பகுதியில் அதாவது இந்திய இராணுவ ஆதிக்கத்தில் மட்டுவிலில் தலைவரின் மனைவியும் பிள்ளைகளும்.
ஆள்மாறி ஆள்விட்டு – அங்கும், எங்கும் விசாரித்தபோது வந்தது வின்சனின் வீரச்சாவுச் செய்தி!. மட்டுவில் செல்லப்பிள்ளையார் கோயிலடி சிலுவில் வயல்வெளியில், மதியக்காவும், பிள்ளைகளும் தங்கியிருந்த வீட்டுக்கு அருகில் கிடந்தது வின்சனின் வித்துடல் இந்தியப்பத்திரிகை நிருபர் அனிதா பிரதாப் எழுதிய “இரத்தத்தீவு” (Island of Blood)) எனும் நூலில் குறிப்பிடப்படும் வின்சன் இவராவார்.

அக்காவையும், பிள்ளைகளையும் காணிக்கை அண்ணரின் வீட்டருகில் இருந்த நடராசா ஐயாவின் வீட்டில் – மட்டுவில் மகேஸ் வீட்டில் – சந்தித்துவிட்டு திரும்பும் வேளையில் இந்தியப்படை எதிர்கொண்டது. தப்பும் முயற்சியும் முடியாமல் போக, சயனைட் அருந்தி தலைவரின் குடும்பத்தையும், தமிழீழத்தின் மானத்தையும் காத்து தன்னுயிர் கொடுத்து நின்றான் வின்சன்.
வின்சன் வீரச்சாவடைந்த சோகமும், தலைவரின் குடும்பத்தைப் பாதுகாத்து விட்டான் என்ற நிம்மதியுமாக, அன்றைய தமிழ்ச்செல்வனின் உணர்வுகள் – அவனது நினைவில் அழியாதவை.

இனி வேறு வழியில்லை என்றானபோது குழந்தைகளைத் தனியாக வேறிடம் அனுப்புவதென்றும், தாயாரை தனியே நகர்த்துவதென்றும் முடிவானது. “தாயும் – இருபிள்ளைகளும்” என்ற அடையாளத்தைநோக்கி வேட்டையாட அலையும் இந்தியப் படைகளிடமிருந்து அவர்களைக் காப்பாற்ற இந்தமுடிவு தவிர்க்க முடியாததானது.
இந்தியப்படையைக் கலக்கிய கச்சாயைச் சேர்ந்த கந்தண்ணை
இந்தியப்படை சூழ்ந்துநிற்க கச்சாய் – புங்கம்பிள்ளையார் கோயிலடிக்கரையில் கந்தண்ணை ஒழுங்குசெய்த மரத்தோணியில் ஏற்றி மதியக்காவை சொர்ணத்திடம் பொறுப்புக் கொடுத்தார்கள் தமிழ்ச்செல்வனும் அவனது அணியினரும். தென்மராட்சியில் இந்திய இராணுவத்தினருக்கு முகம் கொடுக்கத்தக்க, புடம் போடப்பட்ட போராளிகள் பலர் தமிழ்ச்செல்வனின் அணியில் இருந்தனர்.

தலைவரின் குடும்பம் தென்மராட்சியிலிருந்து இடம்மாறிய பின்னரும் அங்கு புலி அணியினரைத் தேடிய பாரதப் படையினர் பாவம், பட்டபாடு கொஞ்ச நஞ்சமல்ல.
மிருசுவிலில் தினேசுடன் பரணியும், அம்மாவும், மகேந்தியும் நிற்பதாய் தேடிப் போவார்கள். எல்லாச் சோதனையும் முடிந்து ஊர்ச்சனத்தை வீட்டிற்கு அனுப்பிவிட்டு படையினர் முகாம் திரும்பும்வேளை, சுற்றி வளைப்புக்குப் போகாத குடுகுடு ஆச்சியின் சோற்றுக் குழையல் உருண்டையில் பசிபோக்கிக் கொண்டிருப்பார்கள் இவர்கள்.

மட்டுவிலில் புலிகள் நிற்பதாக அறிந்து ஊரை வளைத்திருப்பர் இந்தியப் படையினரும், அவர்தம் கைக்கூலிகளும். வயலிற்கு வேலைசெய்யும் கணவனுக்கு என்று சொல்லி அந்த அம்மா கொண்டுவந்த கஞ்சியைக் குடித்துக் கண்பனிப்பர் குணாவும், பாப்பாவும், மந்துவிலில் ஆஞ்சியும் (இளம்பருதி), ரவி அண்ணையும் அப்போதும் கூடநிற்பதைத் தெரிந்துதான் பெரும் படையாய்ப் போனார்கள் இந்தியப் படையினர். வீதியின் முன்புறத்துச் சிறுவனும், தோட்டத்துப் பெரியவரும் முன்னரே சொன்னதால் சேற்றுநிலத்து கண்ணாப்பற்றைக்குள் இறங்கி – இந்தியப் படையை ஏமாற்றி வருவார்கள் இவர்கள்.

இந்திய இராணுவ காலத்தின் 1988 இன் பிற்பகுதி, மணலாற்றுக் காட்டிலிருந்த தலைவர் என்னிடம் யாழ் மாவட்டப் பொறுப்பைத்தந்து வழியனுப்பி வைத்தார். தலைவரின் சொற்படி வல்வெட்டித்துறையில் எனது பாதுகாப்பிடத்தை அமைத்துக் கொண்ட பின்னர், நாம் ஆயுதஅணியாகச் சென்றது தென்மராட்சிக்குத்தான்.
கிட்டண்ணா
யாழ்ப்பாணம் புறப்படும்போது தலைவர், “வல்வெட்டித்துறையில் நின்றுகொண்டு செயற்படு, அங்கேயுள்ள சனம் உனக்குப் பாதுகாப்பைத் தரும்” என்றும், புதியவர்கள் வந்தால் இலகுவாக அடையாளம் காணக் கூடியபடியாக அவ்வூரில் புவியியல், சமூக அமைப்புள்ளமை போன்ற விடயங்களைச் சொல்லித்தந்து வழியனுப்பினார். அவ்வேளையில் உடனிருந்த கிட்டண்ணை “வல்வெட்டித்துறைக்குப் போகவேண்டா மென்று சொல்லவில்லை, அதற்குப் பிறகு நீ போய் தினேசைப் பிடி” என்றார். அதாவது தினேஸ் உங்களுடன் ஒத்துழைப்பான் என்பதும், தென்மராட்சியின் பெரும் தென்னை மரங்களும், மாஞ்சோலைகளும், புதர்க்காடுகளும் நல்ல பாதுகாப்பைத் தரும் என்பதும் கிட்டண்ணையின் கருத்தாக இருந்தது.
புலியணிகளின் வரணித்தளம்
அங்கு தென்மராட்சியில் நாவற்குழியிலிருந்து பளைவரை இருந்த அனைவரையும் மிருசுவிலில் ஒன்றாக்கித்தந்தான் தினேஸ். தென்மராட்சி அணியினரின் கைத் துப்பாக்கிகளுக்கும் ஓய்வு கொடுத்து பெரியசு டுகலன்களுக்கு (றைபிள்கள்) மாறினோம். அணியானோம். தென்மராட்சி – மந்துவிலில் சிலகாலமும், வரணியில் ஏதோவொரு இந்துக்கோயிலின் அருகாமையில் அதற்கு பொற்கோயில் என பெயரிட்டு பல மாத காலமுமாக அணியாய் தளமமைத்துச் செயற்பட்டோ மென்றால் அது தமிழ்ச்செல்வனது தளம். வரணியூரில் எமதுதேவைக்கு வசதியாக, வாகாக உணவுசெய்து தருவதற்கும், ஊர்ப்புதினம் பார்த்துச் சொல்லவுமாக விநாயகத்தை நியமித்து, தன்னுடன் நின்ற குணா, குணத்தார், செல்வராசா ஆகியோரை ஆமிபார்த்துச் சொல்ல காவல்விட்டு, ஆஞ்சி (இளம்பருதி), ரவியண்ணை, விநாயகம், ரவி, டானியல், ரட்ணா என தனது ஆளணியை என்னோடுநிற்கவிட்டு தளமமைத்துத் தந்தான் தினேஸ். தென்மராட்சியில் தமிழ்ச்செல்வனது அணியினரது வீரம் செறிந்த நாட்கள். வீரம் மட்டுமல்ல போரிடுவதில் போட்டியும், நகைச்சுவையும் கலந்திருந்த மறக்க முடியாத நாட்கள் அவை.
சாரங்கட்டிய புலிகள் ஜீன்சுக்கு மாறிய கதை
“சாரங்கட்டிய புலியென்று எதிரிநாடு சொன்னதனால், சாரத்தைமாற்றி எல்லோரும் காற்சட்டைகளுக்கு மாறுவோம்”, கதைத்துவிட்டோம்.

“ஜீன்சிற்கு மாற விரும்புவோர் வாருங்கள்” என்று சொல்ல அங்கிருந்த அணியில் கையை உயர்த்தியவர்கள் இரண்டு பேர் தான். கொஞ்ச நாட்களாக ஜீன்ஸ் போட கையை உயர்த்தியவர்களைப் பார்த்து ஒரே சிரிப்பு – அறுவை – பகிடி, இன்னும் கொஞ்சநாள் கழித்து ஜீன்ஸ் போடாமல் சாரத்துடன் திரிபவர்களைப் பார்த்து அதே சிரிப்பு – அறுவை பகிடி ஆமி ஒருமுறை கலைக்க, அங்குநின்ற ஏழெட்டுப்பேர் ஒன்றாக ஓட ஒருவர்பின் ஒருவராய் ஓடிய எல்லோரும் இரும்புப் படலை ஒன்றை படாத பாடுபட்டு ஏறிக்கடந்து பாய்ந்தோட உயரமேற முடியாத கடைசிஆள் பதறிப் போய் தள்ள படலை முன்னரே திறந்துதான் இருந்ததாம்.
கச்சாய் றோட்டுப்பக்கமோ அல்லது அந்தப்பகுதியில் எங்கோவோர் இடத்தில் கந்தண்ணையைக் கட்டிப்பிடித்த ஆமியை தோளிலிருந்த துவக்கால் அப்படியே சுட்டுச்சாய்த்துவிட்டு எதிரியின் இரத்தம் தன் உடலெல்லாம் தோய, திரும்பிப் பார்க்காமல் ஒரே ஓட்டமாய் ஓடிவந்ததை சொல்லும் போதும் அந்த இடமெல்லாம் சிரிப்பில் அதிரும்.

தமிழ்ச்செல்வன் மற்றும் தென்மராட்சி அணியெல்லாம் நாமிருந்த பொற்கோயில் தேடிவந்தால் பம்பலில் கலகலப்பில், சிரிப்பில் அதிரும் எமதிடம். என்னுடன் அணிகளுக்குப் பொறுப்பாகவிருந்த செல்வராசா மாஸ்ரர் குளிக்கும் நேரம்தவிர மற்றநேரமெல்லாம் தன்னுடலில் இருக்கும் ரவைக்கூடுதாங்கியை (கோல்சர்) கழற்றமறுக்கும் செல்வராசா மாஸ்ரர் வந்து முறைப்படுவார், “இவர்கள் வந்தால் ஒரே சிரிப்பும்சத்தமும். சொல்லுக் கேட்கிறார்கள் இல்லை” என. நடேஸ், பாபுவின் வீரச்சாவிற்குப் பதிலடித்தாக்குதல்.
மீசாலை மண்ணின் மைந்தன் கப்டன் கில்மன்
மிருசுவில் – கண்டிவீதி நெடுஞ் சாலையில் – தேவாலய சுற்றாடலில் அமைந்திருந்தது இந்தியப்படை நிலை, மேஜர் சிறி சாரதியாக வர, ரூபனை நடுவிலிருத்தி கைகளில் குண்டுகளேந்தி வெள்ளைச்சட்டை அணிந்து, வயதானவர்போல் தலைப்பாகைக்கட்டுடன், வஞ்சினம் பொங்கும் நெஞ்சுடன் முன்னிருக்கையில் அமர்ந்து சென்றான் தமிழ்ச்செல்வன். அவனது தலைமையில் பார ஊர்தியொன்றில் சென்ற எமது அணியினரின் தாக்குதலை இந்தியப்படை எதிர்பார்க்க வில்லை. நாம் எதிர்பார்த்திருந்ததை விடவும் படையினரது எண்ணிக்கையும் அதிகம்தான்| நல்ல வேளையாக
பக்க உதவியாக ஈருருளிகளில் சென்ற ரவியண்ணை, ரேகா, பாப்பாவையும் உட்படுத்திய அம்மாவின் அணியும் இன்னொரு பக்கத்தால் தாக்குதலைத் தொடுக்க, வெற்றி எமதானது.

நாம் தங்கியிருந்த பொற்கோயிலுக்கு நெஞ்சில் படுகாயமடைந்த ராகுலனுடன் சேர்ந்துவந்தது வெற்றிச் செய்தியுடன் கப்டன் கில்மனின் வீரச்சாவும், வித்துடல் விடுபட்டுவிட்டதென்ற சோகச்செய்தியும், எமது தரப்பில் கப்டன் கில்மன் வீரச்சாவடைய, ராகுலன், பரணி, வீமன் ஆகிய மூவர் காயமடைந்த அத்தாக்குதலில், அங்கு நின்ற தமது நான்கு அணியினரில் ஒரு அணியினர் முழுப்பேருமே ஒரு ரவைகூட திருப்பிச் சுடமுடியாமல் இறந்து போனதையும், மற்றைய அணியில்கூட ஒருவர்மட்டும் தப்பமுடிந்ததையும் சர்தேஸ்பாண்டே என்ற இந்திய இராணுவ அதிகாரி “யாழ்ப்பாணம் – இடுபணி” (Jaffna Assignment)) என்ற நூலில் விபரிப்பதிலிருந்தே தாக்குதலின் தீவிரத்தையும், திட்டத்தின் துணி கரத்தையும் புரிந்துகொள்ளலாம். அதில் கூட ஒரு வீரச்சாவு மற்றும் சிலகாயத்துடன் பெரியவெற்ற கிடைத்துவிட்டதனாலும், பிறண் இலகு இயந்திரத்துப்பாக்கி உட்பட பல ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதனாலும் நாம் பெருமையும், மகிழ்ச்சியும் அடைந்தோம். இவர்களின், அதாவது தினேசின் அணியினரின் கவலை என்னவென்றால் “கால் கஸ்ரோ” அதாவது சுவீடன் நாட்டின் போர்பஸ் என்ற நிறுவன வடிவமைப்பான உந்துகணைசெலுத்தியை கைப்பற்ற முடியாமல் போனது தான், “சனியன் கால்கஸ்ரோக்காரன் ஓடிவிட்டானம்மான்” என்பான் தமிழ்ச்செல்வன்.

நன்றி – (உலக புலனாய்வு வல்லுநர்களால் நன்கறியப்ப்பட்ட தமிழீழ புலனாய்வுத்துறை பொறுப்பாளர் ச.பொட்டு அவர்களினது பிரிகேடியர் தமிழ்ச்செல்வின் நினைவுக் குறிப்பிலிருந்து)

பகிர்ந்துகொள்ள