இன்றைய விடுதலை தீபம் !! கப்டன் மலரவன்.

You are currently viewing இன்றைய விடுதலை தீபம் !! கப்டன் மலரவன்.
இன்றைய விடுதலை தீபம் !! கப்டன் மலரவன். 1

போர் உலா, விடுதலைப்புலிகளின் போர் இலக்கியம், விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்து நின்ற ஒரு போராளியின் நேர்த்தியான அனுபவப்பகிர்வு. போரியல் வரலாற்றின் ஒரு அங்கமான அந்தப் படைப்பின் கர்த்தா – கப்டன் மலரவன். 1992 கார்த்திகை 23ம் நாள், பலாலி – வளலாயில் 150 காவலரண்களை தாக்கியழித்து பாரிய வெற்றியைப் பெற்ற தாக்குதலில் அந்த விடுதலைப் படைப்பாளி வித்தானான். கப்டன் மலரவனை விடுதலைப்போராட்டம் இழந்து பத்தொன்பது வருடங்கள் கடந்துவிட்டதன் நினைவுநாள் இன்று.

கப்டன் மலரவன் ஒரு பன்முக ஆற்றலுள்ள போராளி. விடுதலைப்போராட்டத்தில் அவரது ஆளுமையும் பங்களிப்பும் காத்திரத்தன்மையும் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்கும் என எண்ணியிருந்த போதும் குறுக்கிட்ட வீரமரணம் அது நிறைவேறத் தடையாகிவிட்டது. காலம் குறுகியிருந்தாலும் தனது களப்பணிகளிற்கு மத்தியில், தன்னுடைய அனுபவப் படைப்புகளினூடாக சிறந்த எழுத்தாளுமையை வெளிப்படுத்தியிருந்தது மட்டுமல்லாமல், மாங்குளம் முற்றுகைச் சமரின் அனுபவப் பார்வை கொண்ட சிறந்த பதிவையும் படைத்திருந்தார். அது போராளிகளுக்கான அனுபவத்தைக் கொடுத்தது. அவரது எழுத்துக்கள் பற்றிக் குறிப்பிட்ட அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப தமிழ்செல்வன் அவர்கள், ‘நீ எழுத்துருவில் தந்துவிட்டுப் போன படைப்புகள் நிச்சயமாக எமது சந்ததியின் மனங்களிலே ஆழப்பதியும் என்பதில் சந்தேகமில்லை’ என பதிவு செய்துள்ளார்.

எழுத்துக்களுடன் வாழ்ந்த மலரவனின் படைப்புகள், அவரது வீரச்சாவிற்குப்பின் வெளியீடுகளாக வெளிவந்தன. அவற்றில் போர் உலா என்னும் படைப்பு இலங்கை இலக்கிய பேரவையின் அகில இலங்கை ரீதியான தேர்வில் முதல் பரிசு பெற்றமை அவரது படைப்பாளுமையின் தரத்தைச் சான்று பகர்ந்து நிற்கின்றது. மேலும், எனது கல்லறையில் தூவுங்கள் (சிறுகதை,கவிதைகளின் தொகுப்பு), மலரவனின் ஹைக்கூ கவிதைகள் , புயல் பறவை (நாவல்-வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டல பரிவு பெற்றது) என படைப்புகள் பல. இவை அத்தனையும் தனது இருபது வயதிற்குள் எழுதி முடித்தவர்.

ஒவ்வொரு போராளியும் கொடுமைகளைக் கண்டு கொதித்தெழுகிறான், உணர்வுகள் ஊட்டி வளர்க்கப்படுகிறான் என்பதற்கு கப்டன் மலரவனின் வாழ்க்கையும் அதன் பின்னணியும் மிகச் சிறந்த சான்று. மலரவனின் தந்தை ஒரு வைத்தியர். கொழும்பில் வெடித்த 1958ம் ஆண்டு இனக்கலவரத்தில் சிக்குண்ட அவர் கடை ஒன்றுக்குள் புகுந்து பாதுகாப்புத் தேடியிருந்தார். அங்கும் வந்து அவரைத்தாக்க முற்பட்ட சிங்களக்காடையர்களை சோடாப்போத்தில்களால் தாக்கி விரட்டியடித்து தன்னை பாதுகாத்துக் கொண்டார். பின்னர் 1977ம் ஆண்டு கண்டி வைத்தியசாலையில் கடைமையாற்றிக் கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற இனப்படுகொலையின் போது சிங்கள வைத்திய நிர்வாகம் தமிழ் வைத்தியர்களின் பாதுகாப்பில் கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருந்ததைக் கண்டித்துத் தனது வேலையை இராஐனாமா செய்துவிட்டு, மாங்குளத்தில் வந்து விவசாயம் செய்து தனது குடும்பத்தைக் காப்பாற்றினார். 1985ம் ஆண்டு கொக்கிளாய் முகாம் விடுதலைப்புலிகளால் தாக்குதலுக்குள்ளான போது போராளிகளுக்கான வைத்தியராகக் கடமையாற்றினார். தொடர்ந்து ஆ.க.வெ தாக்குதல் நடவடிக்கை, வவுனியாவில் எல் 3 எடுத்த தாக்குதல் என பல தாக்குதல்களின் போது களமுனை வைத்தியராக, காயமடைந்து வந்த போராளிகளிற்குக் களத்திற்கு நெருக்கமாக நின்று சிகிச்சையளித்த ஒரு சிறந்த தேசப்பற்றாளர். மலரவனின் மற்றுமொரு அண்ணன்; மருத்துவபீடத்தில் படித்துக்கொண்டு, தியாகி திலீபன் அவர்களுடன் தொடங்கி விடுதலைப்போராட்டத்தில் பங்காற்றிக் கொண்டிருந்தார். தேசப்பற்றுக் கொண்ட அக்குடும்பத்தின் புறச்சூழல்கள் சிறுவயதிலிருந்தே மலரவனுக்குள் விடுதலைத்தீயை வளர்க்கத்தொடங்கின.

யாழ்ப்பாணத்தின் முன்னணிப்பாடசாலைகளில் ஒன்றான சென் ஜோன்ஸ் பாடசாலையில் சிறந்த பெறுபேறுகளைக் கொண்ட மாணவனாக விளங்கிய அவர், உயர்தரத்தில் விஞ்ஞானத்துறையில் முதலாவது வருடத்தில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று பாடசாலையின் முதல் மாணவனாகத் தேர்வாகியிருந்தார். அந்த வேளையில்தான், இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து, சிங்கள அரசுடனான போர் முழு வீச்சில் தொடங்கியது. மலரவன், தனது கல்வியைத் துறந்துவிட்டு விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டார். மணியந்தோட்டம் பயிற்சி முகாமில் தனக்கான அடிப்படைப்பயிற்சியைப் பெற்றுக்கொண்டார்.

பயிற்சியை முடித்த பின், பசீலன் மோட்டார் பிரிவில் ஒரு மோட்டார் அணியின் பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டு மீண்டும் அதற்கான பயிற்சியை தொடங்குகின்றார். 1990களில் சண்டையின் வெற்றியைத் தீர்மானிக்கும் பிரதான பணி பசீலன் அணியையே சார்ந்திருந்தது. அந்த ஆயுதங்கள் அனைத்தும் உள்ளுரில் தயாரிக்கப்பட்டவை. அவற்றைக் கையாளுவதற்கும்; துல்லியமான சூட்டை வழங்குவதற்கும் துல்லியமான கணிப்பீடுகள் மிகமுக்கியமானவை. அந்தப் கணிப்பீட்டுப் பணியிலும் அதனை நேர்த்தியாக இயக்குவதிலும் பெரும்பங்கு மலரவனுக்கு உண்டு. அதற்காகக் கடுமையாக உழைத்தார். பீரங்கிகளின் வேகத்தையும் தூரத்தையும் கணிப்பது தொடர்பில் கணிதத்தில் உள்ள விதிமுறைகளை பயன்படுத்தி ஒவ்வொரு செல்லின் நிறையையும் கணித்து ஒவ்வொன்றும் என்ன வாசிப்பில் விட்டு செலுத்தினால் அது இலக்கைத் தாக்கும் என்பதைப்பற்றிய கணிப்பீடுகளில் தனது நேரத்தை செலவிட்டுத் துல்லியமாகக் கணித்தார். அதற்கும் மேலாக, ஏனைய மோட்டார் அணியின், எத்தரத்திலுள்ள வீரர்களிற்கும் சொல்லிக் கொடுக்கும் ஆற்றலும் அவருக்கிருந்தது.

தனக்கு தரப்படும் பணியில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் அதை புதிய பரிமாணத்தில் அல்லது கோணத்தல் பார்க்கும் திறனும் அதைப்பற்றி மென்மேலும் சுயமாக அறிந்து மெருகேற்றும் திறனும் அவரை சிறந்த செயல்திறன்மிக்க போராளியாக இனங்காட்டியது. அதுவே குறுகிய காலத்தில் பசீலன் மோட்டார் பிரிவின் உதவிப் பொறுப்பாளர் என்னும் நிலைக்கு அவரை உயர வைத்தது.

யாழ்கோட்டையில் இருந்து இராணுவம் தப்பியோடியது என்றால் அதன்பின்னணியில் பிரதானமான பங்கை வகித்தது பசீலன் படையணி. அந்தக்களமுனை தொடக்கம் மாங்குளம், சிலாவத்துறை, காரைநகர், ஆனையிறவு, மின்னல் என பல களமுனைகளில் வெற்றிகளில் பசீலன் மோட்டாருடன் பங்கு கொண்ட மலரவனின் பங்குகள் பெறுமதியானவை.
சிங்களப்படைகளுக்கு எதிரான தாக்குதல்களில் சிங்களப்படைக்கு புளியைக் கரைப்பது பசீலன் செல்கள் என்பதனால் பசீலன் செல் அடிக்கப்படும் போது வெளிவரும் வெளிச்சத்தை கணிப்பிட்டு அப்பகுதியை நோக்கி கடுமையான செல்தாக்குதலை நடாத்தி பசீலன் தாக்குதலைக் கட்டுப்படுத்த சிங்களப்படை முயற்சிப்பது வழமை. அவ்வாறான சமயங்களில் மேற்கொள்ளப்படும் கடுமையான செல்த்தாக்குதல்களின் மத்தியிலும் இயல்பாகவும் தெளிவாகவும் செயற்படும் அவரது துணிச்சல் மற்றைய போராளிகளுக்கும் மிகுந்த உற்சாகத்தைக் கொடுக்கும். என்றைக்கும் சோர்ந்து போனதில்லை.

சிலாவத்துறை முகாம் தாக்குதலின் போது வெட்டவெளியில் விமானக் குண்டு வீச்சுக்களின் மத்தியில் எவ்வித தடையரண்களும் இல்லாமல் முகாமிற்கு நேருக்கு நேரே பசீலனை வைத்துப் தாக்குதலை நடாத்திக் கொண்டிருந்த அவர், செல் தாக்குதலில் காயப்பட்டு மரணத்தின் வாசல் வரை எட்டிப்பார்த்து, களமருத்துவமனையில் கடமையாற்றிக்கொண்டிருந்த அவரது அண்ணனின் கரங்களுக்குச் சென்று மீண்டுவந்தார்.

ஆ.க.வெ சமரில் ஆனையிறவு பிரதான முகாம் தாக்கியழிப்பில் பசீலன் மோட்டார் அணிக்குத் தலைமைதாங்கி, முகாமின் மையத்திலிருந்த கோபுரத்தைத் தனது துல்லியமான கணிப்பால் தகர்த்து விழுத்தி தனிமுத்திரையைப் பதித்தார். இத்தாக்குதலில் இவரது தந்தையும் அண்ணனும் களமுனை மருத்துவர்களாகப் பணியாற்றினார்கள். இத்தாக்குதல் மட்டுமன்றி, மணலாற்றில் நடைபெற்ற மின்னல் எதிர்த்தாக்குதலிலும் குடும்பத்தில் மூன்று பேரும் பங்காற்றியது என்பது விடுதலைப் போராட்டத்தில் இக்குடும்பத்தின் பங்களிப்பிற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகக் கூறமுடியும்.

பசீலன் படையணியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தபின்னர் யாழ்மாவட்டத்தின் மாணவர் அமைப்புப் பொறுப்பாளராக பொறுப்பெடுத்து தனது தனித்துவமான தலைமைத்துவ ஆற்றலை வெளிப்படுத்தயிருந்தார். மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் சிறந்த திட்டங்களை அறிமுகப்படுத்தி முந்நகர்த்தியதில் பெரும் பங்கு மலரவனுக்குண்டு. அவை, சமூகத்தின் மீதும் அதன் இளம் தலைமுறையின் கல்வி மீதும் அவர் கொண்ட தாகத்தின் வெளிப்பாடாக விளங்கின.

பின்னர் யாழ்மாவட்டத்தளபதியாக இருந்த சு.ப.தமிழ்ச்செல்வன் அவர்களுடன் பணியாற்றினார். குறிப்பாக மாவட்ட இராணுவ அறிக்கைப் பொறுப்பாளராக இருந்தார். இதன்போது ஒவ்வொரு சண்டையிலும் பங்குபற்றுபவர்களிடம் சண்டையில் நடந்த சம்பவங்களை கேட்டறிந்து சண்டை எவ்வாறு நடந்தது, அதில் திறமையாக செயற்பட்டவர்கள், திட்டத்தில் ஏற்பட்ட சரி பிழைகள், அடுத்த சண்டையில் செய்ய வேண்டிய மாற்றங்கள் போன்ற ஒரு மதிப்பீட்டு இராணுவ அறிக்கையை செய்து, தளபதிக்கு சரியான நிலவரத்தைப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் செவ்வனே செய்தார்.

அக்காலப்பகுதியில், தெல்லிப்பளையில் வேவு நடவடிக்கை ஒன்றிற்காக பணியாற்றிக் கொண்டிருந்தவேளை எதிரியின் பதுங்கித்தாக்குதலில் வேவுப் பொறுப்பாளர் காயமடைந்தபோதும் தொடர்ந்து எதிர்த்தாக்குதலை மேற்கொண்டு காயமடைந்தவரை கொண்டுவந்து சேர்த்தார். இது அவரது ஓர்மத்திற்கு எடுத்துக்காட்டு.

அந்தநேரத்தில்தான் 1992ம் ஆண்டு பலாலி வளலாய் தாக்குதலுக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அதில் சு.ப.தமிழ்க்செல்வன் அவர்களின் பகுதித் தாக்குதல் தொடர்பான சகலவிடயங்களையும் சரிபார்த்து உறுதிப்படுத்தி, அதுதொடர்பான விடயங்களை தளபதியுடன் பரிமாறும் வேலைகள் உட்பட தாக்குதலுக்கான பன்முகப்படுத்தப்பட்ட வேலைகளில் தளபதிக்கு உறுதுணையாக நின்று செயற்பட்டார்.

எப்போதும் சண்டை நேரங்களில் மலரவணை கட்டுப்படுத்துவது கடினம். சண்டை தொடங்கினால் உடனே அங்கு செல்ல வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருப்பார். அதில் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. அதுபோலத்தான், அன்றைக்கும் சண்டை தொடங்கும்வரை தளபதியுடன் நின்ற மலரவனை திடீரெனக் காணவில்லை. தளபதி கோபத்துடன் காத்திருந்தார். சிறிது நேரத்தில், களமுனைப்பகுதிக்குச் சென்று நிலமைகளை அவதானித்துவிட்டு தன்னால் இயன்றளவு ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டு வந்த சேர்ந்த மலரவனைப் பார்த்த தளபதி, அவரது குணாதிசயத்தைக் கண்டு பொறுமையானார். நெகிழ்வாக, தன்னுடன் நின்று சிலவேலைகளை ஒழுங்குபடுத்துமாறு கூறினார். மேலும் சீற்றத்திற்கு ஆளாகக்கூடாது என்று நினைத்த மலரவன் அவர் குறிப்பிட்ட வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்.

தாக்குதலில் பலத்த இழப்புகளைச் சந்தித்த இராணுவம், புலிகளுக்கு இழப்புகளைக் கொடுக்கும் நோக்குடன் பின்தளப்பகுதியை நோக்கி கடுமையான எறிகணைத்தாக்குதலை மேற்கொண்டது. அதில் ஒன்றன் பின் ஒன்றாக வீழ்ந்து வெடித்த மூன்று செல்களில் மலரவன் படுகாயமடைந்தார். அந்த இறுக்கமான நிமிடங்களை நினைவு கூர்ந்த தளபதி ‘காயப்பட்டவுடன் களமருத்துவனைக்கு அவசரமாக அனுப்பினோம். என்னோடு நின்ற ஒருவர் வந்து மலரவனுக்கு கொஞ்சம் கடுமையாக உள்ளது, கால்துண்டாடப்பட்டுவிட்டது என்று கூறினார். கால் கழற்றினாலும் பரவாயில்லை, உயிரோடு இருந்தால் அவன் இன்னும் எவ்வளவோ சாதனைகளைப் படைப்பான என்;று என் உள்ளுணர்வு அடிக்கடி வேண்டிக்கொள்கின்றது. ஏனெனில் பல நூற்றுக்கணக்கான போராளிகளில் ஒருசிலர், இப்படியான நிலையிலும் அபரிமிதமான திறமைகளையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தி நிற்பார்கள். அந்த வரிசையில் மலரவனும் ஒருவன் என்று நன்றாகத் தெரியும். இவ்வேளையில் எமக்கு அடுத்த களமுனையில் மலரவனது அண்ணன் – அவர் மேல் உயிரையே வைத்திருந்த சகோதரன் – வைத்திய கலாநிதியும் போராளியுமான அவர், எமது மருத்துவமனையில் நின்று பல போராளிகளின் உயிர்களைக் காக்கும் கடமையில் துரிதமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்தார். ஆனால்……. தாக்குதல்கள் முடிந்து எம் நிலைகளுக்கு நாம் வருகின்றபொழுது எங்கள் உள்ளத்தை உருகவைக்கும் பேரதிர்ச்சி தரும் அந்தச் செய்தியைச் சொன்னார்கள்’ என்று அந்தக் கணங்களை விவரித்தார். போர்க்களத்தில் ஆயுதங்களுடன் மட்டுமன்றி பேனாவுடனும் சுழன்று கொண்டிருந்த அந்த வீரன் மண்ணுக்காக வித்தாகி விட்டான். அதேவேளை, அவரது அண்ணன் அதிகாலை மூன்று மணிக்கு தம்பியின் வீரச்சாவுச் செய்தியை அறிந்திருந்த வேளையிலும் தொடர்ந்து அங்கு காயமடைந்து வந்துகொண்டிருந்த போராளிகளிற்கு சிகிச்சையளித்துக் கொண்டிருந்தார்.

மலரவன் என்னும் ஒரு போராளியை தமிழன்னை அவரைப் பெற்ற மலரன்னையிடம் இருந்து பறித்து எடுத்துவிட்டாள். அந்தப் போராளியை, படைப்பாளியை சுமந்த தாயின் கரங்கள் போராட்டம் தொடர்பான பல பதிவுகளை செய்தது. தனது பிள்ளைக்கும் வீரமகனுக்கு தாயின் கவிதை அஞ்சலி! என்ற தலைப்பில் கவிதைகளைக் கண்ணீரோடு வரைந்தார் வீரத்தாய் மலரன்னை. அக்கவிதையின் இறுதி வரிகளில்

மண்ணில் உதிர்த்திட்ட மைந்தனே! – இன்று
விண்ணில் உயர்ந்திட்டாய் மா வீரனாய்
விதையாய் வீழ்ந்திட்டாய் மண்ணிலே – இன்று
கதையாகி விட்டதே உன் சரிதை.

இருபதே வருடங்கள் வாழ்ந்தாலும்
அர்த்தமாய் வாழ்ந்திட்டாய் வல்லமையால் – இந்த
மண்ணின் விடியலே உன் கனவு – நீ
விண்ணிலிருந்து நோக்குவாய் மலரும் தமிழீழமதை!

மேலும் ‘மலரவனிடத்தில் குறுகியகால அனுபவத்திற்குள்ளேயே அவனிடம் ஓர் தளபதிக்கே உரித்தான திட்டமிடும் ஆற்றலைப் பார்த்தேன். அவன் கதைப்பது மிகவும் குறைவு. இதை செயல் வடிவம் நிறைவுபடுத்திற்று. இது எங்கள் தலைவரிடம் இருக்கும் தனித்துவமான ஒர் உயர்ந்த தன்மை’ என சு.ப தமிழ்ச்செல்வன் அவர்கள் பதிவு செய்கின்றார்.

ஒற்றைவரியில் மலரவன் – போர்வீரன், வேவுப்போராளி, சிந்தனையாளன், தனக்குத் தரும் பணியை மெருகேற்றும் முயற்சியாளன், களத்தின் தேவையை விளங்கிச் சுயமாகச் செயற்படும் ஒருவன், சண்டையை மதிப்பீடு செய்யும் மதிப்பீட்டாளன், படைப்பாளி, தீவிர உழைப்பாளி, என நீண்டு செல்லும் அவரது ஆளுமை பன்முகத்தன்மை வாய்ந்தது.

இத்தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கப்டன் மலவரன் உட்பட 57 பேருக்கும் மற்றும் வீரச்சாவடைந்த அத்தனை மாவீரர்களிற்கும் நாட்டுப்பற்றாளார்களிற்கும் நினைவஞ்சலியை செலுத்துவோம். விடுதலை வீரர்களின் சுவாசமான சுதந்திர விடுதலை என்னும் அடைவை நோக்கி தளர்வில்லாமல் ஒன்றாகப் பயணிப்போம்.

‘ஒரு விடுதலை வீரனின் சாவு ஒரு சாதாரண மரண நிகழ்வல்ல. அந்தச் சாவு ஒரு சரித்திர நிகழ்வு. ஒரு உன்னத இலட்சியம் உயிர் பெறும் அற்புதமான நிகழ்வு. உண்மையில் விடுதலை வீரன் சாவதில்லை. அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்து விடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்களைப் பற்றிக் கொள்கின்றது. ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிவிடுகின்றது’ – தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள்.

பகிர்ந்துகொள்ள