பள்ளிக்கூடப் பிள்ளைகள் ‘ஆய்வுக்கூடப் பரிசோதனைக்குப் பயன்படும் பன்றிகள் (cobayes) அல்ல’ என்று குறிப்பிட்டு எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் வெளியிட்டிருக்கும் காரசாரமான விமர்சனத்துக்கு மத்தியில்-
அதிபர் மக்ரோன் தனது கல்வி அமைச்சர் சகிதம் இன்று ஆரம்பப் பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்து அங்கு சில சிறுவர்களுடனும் ஆசிரியர்களுடனும் கலந்துரையாடியுள்ளார்.
Poissy (Yvelines) பகுதியில் குறைந்த எண்ணிக்கையான பிள்ளைகளுடன் இயங்கும் l’école Ronsard ஆரம்ப பள்ளிக்குச் சென்ற அரசுத் தலைவர் அங்கு வகுப்பறையில் நிலைமைகளைக் கேட்டறிந்த பின்னர் அப்பகுதியைச் சேர்ந்த நகர பிதாக்கள் பலருடன் வீடியோ வாயிலாக கலந்துரையாடி பள்ளிகளை ஆரம்பிக்கும் ஏற்பாடுகள் பற்றி அறிந்து கொண்டார்.
பாரிஸ் மேயர் உட்பட நாட்டின் பெரும்பாலான நகர மேயர்களின் கவலைகள், கண்டங்களுக்குக்கு மத்தியில் ஆரம்பப் பாடசாலைகள் அனைத்தும் மே 11 ஆம் திகதி முதல் திறக்கப்படுகின்றன.
இந்த ஆரம்பத்தை மீள உறுதி செய்யும் விதமாகவே மக்ரோன் இன்று பாடசாலை ஒன்றுக்கு விஜயம் செய்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது
மக்ரோன் இன்றைய விஜயத்தின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொதுப் பாவனைக்குரிய ‘மாஸ்க்’ ஒன்றை அணிந்திருந்தார். வகுப்பறை மேசை ஒன்றில் அமர்ந்திருந்தவாறு ஊடகவியலாளர்களின் சில கேள்விகளுக்கு அவர் பதிலளிப்பதை காட்சி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
பாடசாலைகளைத் திறப்பதில் நகர மேயர்களுக்கு இருக்கும் கவலைகளையும் கேள்விகளையும் தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது எனத் தெரிவித்துள்ள மக்ரோன், பாடசாலைகளைத் திறக்கவேண்டியது கல்வி மற்றும் சமூக ரீதியில் மிக அவசியமான ஒன்று எனக் கூறினார். மே 11 என்பது எப்போது நாங்கள் பள்ளிகளை முழு அளவில் திறக்கலாம் என்பதை மதிப்பிடுகின்ற ஓர் ஆரம்ப நாள் மட்டுமே என்று அவர் விளக்கமளித்தார்.
‘இரண்டு மாத காலம் பிள்ளைகளை வீட்டுகளுக்குள் வைத்திருப்பது மன அழுத்தம் மிக்கது. அவர்களை நாங்கள் வெளியே கொண்டுவர வேண்டும்.’
“வைரஸுடனான சண்டையில் நாங்கள் வென்று விடவில்லை. அது இன்னும் இங்கே உள்ளது. அதன் வேகத்தைக் குறைத்திருக்கின்றோம். அவ்வளவுதான்.
‘இப்போது ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்கவுள்ளோம். நாங்கள் அனைவரும் கூட்டுப் பொறுப்பாளிகளாக மாறினால் இதில் தொடர்ந்து முன்னேறிச் செல்லமுடியும் என்ற நம்பிக்கையைத் தர விரும்புகின்றேன்.’
-இவ்வாறு அதிபர் அங்கு மேலும் தெரிவித்தார்.
இந்த வைரஸ் தாக்கம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் தகர்ந்துபோகும் என்று அஞ்சுகின்றீர்களா என அவரிடம் வினா தொடுத்தபோது,’ தகர்ந்துபோகும் ‘என்ற பெரிய வார்த்தையை தான் ஏற்க மாட்டேன் என்று மறுத்தார். “என்னைப் பொறுத்தவரை பொருளாதாரத்தில் ஒரு பெரும் அதிர்வு மட்டுமே இருக்கும்” என்றார் மக்ரோன்.
வரவிருக்கும் கோடை விடுமுறைக் கால பயணங்கள் குறித்தும் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு –
கோடை விடுமுறைக்காலத்தில் பெரிய அளவிலான பயணங்களைத் தடைசெய்ய உத்தேசித்துள்ளோம். அச்சமயம் நாங்கள் ஐரோப்பாவினுள்ளேயே இருக்க நேரிடும். ஆனால் அது பற்றி இப்போது முன்கூட்டியே எதுவும் கூற இயலாது. ஜூன் மாத இறுதியிலேயே நிலைமை தெரியவரலாம் – என்று மக்ரோன் பதிலளித்தார்.
(05-05-2020 பாரிஸ். – குமாரதாஸன்)