பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெக்ரீக்-இ-இன்சாப் கட்சி தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதில் சில வழக்குகளில் சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார்.
இதற்கிடையே அவரது கட்சி சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக அரசு குற்றம் சாட்டியது. இதனால் இம்ரான்கான் கட்சியை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இம்ரான்கான் கட்சியின் தலைமையகத்தில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர். தலைநகர் இஸ்லாமா பாத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்திற்குள் போலீஸ் படை நுழைந்தது.
அங்கு பலத்த பாதுகாப்புடன் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தனர். பின்னர் அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹசன் உள்பட முக்கிய தலைவர்கள் மற்றும் பெண் தொண்டர்களை கைது செய்து அழைத்து சென்றனர்.
போலீசாரின் இந்த திடீர் நடவடிக்கை பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இம்ரான்கான் கட்சியை தடை செய்ய அரசு முயற்சி செய்து வரும் சூழலில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.