கிளிநொச்சி இரணைமடு குளத்தில் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்த சிலர் சட்டவிரோத தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றமையால் பெரும்பாலான ஏனைய தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டள்ளதாக பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கிளிநொச்சி இரணைமடு குளத்தில் சுமார் 50 மீனவர்கள் தடை செய்யப்பட்ட இழுவை வலைகளை பயன்படுத்தி மீன் பிடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன்காரணமாக ஏனைய மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறி தடை செய்யப்பட்ட தொழிலில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நீரியியல் வள திணைக்களம் குறித்த தடை செய்யப்பட்ட தொழிலை மேற்கொள்ள வேண்டாம் என அறிவித்தும் அதனையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டுள்ள மீனவர்கள். தொடர்ந்தும் சிலர் இவ்வாறு தடை செய்யப்பட்ட தொழில் ஈடுப்பட்டால் ஏனைய தொழிலாளர்கள் முற்றுமுழுதாக பாதிக்கப்படுவார்கள் எனவும் கவலை தெரிவித்துள்ளனர்.
இரணைமடு குளத்தை நம்பி 152 குடும்பங்கள் தங்களது வாழ்வாதார தொழிலாக நன்னீர் மீன்பிடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் குறிப்பிட்டனர்.
எனவே இது தொடர்பில் உரிய திணைக்கள அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு வினவிய போது இந்த விடயம் தொடர்பில் தனக்கும் தகவல் கிடைத்ததாகவும் எனவே தடை செய்யப்பட்ட தொழிலை மீனவர்கள் மேற்கொள்ளும் இடத்து அவர்கள் கைது செய்யப்பட்டு சட்டநடவடிக்கை உட்படுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.