இரண்டு வருடங்களின் பின்னர் இயல்புக்குத் திரும்புகிறது கனடா!

You are currently viewing இரண்டு வருடங்களின் பின்னர் இயல்புக்குத் திரும்புகிறது கனடா!

கனடா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று நோயின் தாக்கம் குறைந்துவரும் நிலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு சுமார் 2 வருடங்களின் பின்னர் நாடு இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது.

கடந்த 7 நாட்களில் கனடாவில் தினசரி சராசரியாக 500 க்கும் குறைவான புதிய தொற்று நோயாளர்களே உறுதிப்படுத்தப்பட்டனர். மருத்துவமனைகளில் 750 நோயாளிகள் உள்ள அதேநேரம், தீவிர சிகிச்சையில் 366 பேர் மட்டுமே உள்ளனர்.

15 மில்லியனுக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட கனடாவின் மிகப்பெரிய மாகாணமான ஒன்டாரியோ, புதன்கிழமைஒன்பது மாதங்களில் முதல் முறையாக ஒரு கொரோனா மரணங்கள் கூட பதிவு செய்யப்படவில்லை. மாகாணத்தில் தினசரி தொற்று நோயாளர் தொகையும் 200-க்கும் குறைவாகவே பதிவாகி வருகிறது.

கனடா முழுவதும் நேற்று சனிக்கிழமை வரை 14 இலட்சத்து 20 ஆயிரத்து 279 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. நாடு முழுவதும் சிகிச்சையில் உள்ள தொற்று நோயாளர் தொகை 5,415 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் 26,428 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அத்துடன், நாடு முழுவதும் இதுவரை 41.8 மில்லியனுக்கும் அதிகமான கோவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

பிரிட்டிஷ் கொலம்பியா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் தொற்று நோய் குறைந்துள்ள நிலையில் நீண்டகால முதியோர் பராமரிப்பு மையங்களில் வசிப்பவர்கள் ஜூலை 19 முதல் அவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை எந்தவித கட்டுப்பாடுகளும் இன்றி பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அல்பர்ட்டா

அல்பர்ட்டாவில், லாம்ப்டா கொரோனா திரிவு வைரஸ் தொற்றுக்குள்ளான இருவர் கண்டறியப்பட்டுள்ளனர். இருவரும் மாகாணத்துக்கு வெளியிலான பயண வரலாற்றைக் கொண்டவர்கள் என மாகாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சஸ்காட்செவன்

சஸ்காட்செவன் மாகாணத்தில் நேற்று 42 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். ஒரு கொரோனா மரணம் பதிவானது. தொற்று நோய் தீவிரம் குறைந்துள்ள நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாடுகளை மாகாண அரசு மேலும் தளர்த்துகிறது.

மானிட்டோபா

மானிட்டோபாவில் நேற்று சனிக்கிழமை 87 புதிய தொற்று நோயாளர்கள் பதிவாகினர். எந்தவொரு கொரோனா மரணங்களும் பதிவாகவில்லை.

ஒன்ராறியோ

ஒன்ராறியோ மாகாணத்தில் சனிக்கிழமை 179 புதிய தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டதுடன், 8 கொரோனா மரணங்களும் பதிவாகின.

கியூபெக்

கியூபெக்கில் கடந்த 24 மணி நேரங்களில் 77 தொற்று நோயாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டனர். கொரோனா மரணங்கள் எதுவும் பதிவாகவில்லை.

கியூபெக்கில் 18 முதல் 29 வயதிற்குட்பட்டவர்களில் 68 சதவீதம் பேர் முதல் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

அட்லாண்டிக் பிராந்தியம்

அட்லாண்டிக் பிராந்தியத்தில் நியூ பிரன்சுவிக் மாகாணத்தில் நேற்று ஐந்தாவது நாளாக புதிய நோயாளர்கள் ஒருவர் கூட பதிவாகவில்லை. இங்கு தகுதியானவர்களில் 50 வீதத்துக்கும் மேற்பட்டேர் தடுப்பூசிகளை பெற்றுள்ளனர்.

நியூபவுண்ட்லாண்ட் மற்றும் லாப்ரடோர் பிராந்திய வாசிகளில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் குறைந்தது ஒரு தடுப்பூசியைப் பெற்றனர். 28 வீதத்திற்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் போட்டுள்ளனர். நோவா ஸ்கோடியாவில் நேற்று ஒரு தொற்று நோயாளி உறுதிப்படுத்தப்பட்டார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply