மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது வீட்டிலிருந்து 31.05.2004 அன்று அலுவலகம் நோக்கி பணிக்காக சென்றுகொண்டிருந்த வேளை சிறிலங்கா அரச படைகளின் ஆயுத தாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட “நாட்டுப்பற்றாளர்” ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்களின் 16ம் ஆண்டு நினைவு வணக்கநாள் இன்றாகும்.
இலங்கைப் புலனாய்வாளர்களின் துணையுடன் அரசாங்கத்தின் துணை இராணுவக் குழுவாக இயங்கிய கருணா- இனிணபாரதி – பிள்ளையான் தரப்பால் 2004 மே 31ஆம் திகதி அன்று ஊடகவியலாளர் ஐ.நடேசன் மட்டக்களப்பில் பலியெடுக்கப்பட்டார்.
நெல்லியடியைப் பிறப்பிடமாகக் கொண்ட ஊடகவியலாளர் நடேசன் 20 வருடம் வீரகேசரியில் பத்தி எழுத்தாளராகப் பணியாற்றியவர். இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் பிரதி தலைவராகவும் பணியாற்றி இருந்தார்.விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் – எதிர்ப்பாளர்கள் என்கின்ற காரணங்களால் பரஸ்பரம் பலிகொள்ளப்பட்டவர்களில் நடேசனும் முக்கியமானவர். 2001 ஜூன் 17 ஆம் திகதி இவரை விசாரணைக்கு அழைத்த இலங்கை இராணுவத்தின் உயரதிகாரி ஒருவர் ‘இராணுவத்திற்கெதிரான செய்திகளை வெளியிட்டால் நீவிர் கைது செய்யப்படுவீர்’ என அச்சுறுத்தியதாக ‘ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் சர்வதேச அமைப்பு’ CPJ தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
இராணுவத்தின் தொடர் அச்சுறுத்தலையும் மீறி, தனது ஊடகப் பணியை முன்னெடுத்த நடேசன், கருணாவின் பிரிவோடு கிழக்கில் பலி எடுக்கப்பட்ட முதலாவது மூத்த ஊடகவியலாளர் ஆனார்.இவருக்கு முன்னரும் பின்னருமாக இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த ஆட்சியாளர்களின் புலனாய்வுக் குழுக்களும் – துணை இராணுவக் குழுக்களும், ஆயுதம் தாங்கிய விடுதலை இயக்கங்களும் தம்மை விமர்சித்த ஊடகவியலாளர் பலரைப் பலிகொண்டனர். பலரை காணாமல் போகச் செய்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்தபோது இவர் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.
யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜி.நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.
நீண்ட காலம் ஊடகப் பணி செய்து அனுபவம் பெற்றிருந்த இவர், ஊடகத்துறையில் முழு நேரமாகப் பணியாற்றாது விட்டாலும், ஒரு முழுநேர ஊடகவியலாளன் ஆற்றும் பணிக்கு ஈடாக, அல்லது அதற்கு மேலாகவும் தனது ஊடப்பணியை செவ்வனே ஆற்றி வந்தவர்.
இவரது பணிக்கு சாகித்திய விருது, சிறந்த ஊடகவியலாளர் விருது (2000), ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை, அவரது ஊடகப் பணிக்கு கிடைத்த சான்றுகளாகும். இவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர்கூட தனது தலைசிறந்த ஊடகப்பணிக்காக மதிப்பளிக்கப்பட்டவர்.
20 வருடங்களுக்கு மேலாக கொழும்பு வீரகேசரி பத்திரிகையின் செய்தியாளராகவும், ‘நெல்லை நடேசன்’ என்ற பெயரில் பத்தி எழுத்தாளராகவும் இருந்த இவர், 1997ஆம் ஆண்டு முதல் லண்டனை தளமாகக் கொண்டியங்கிய ஐ.பி.சி வானொலி, கொழும்பு சக்தி தொலைக்காட்சி உட்பட ஏனைய பல ஊடகங்களுக்கு தனது இறுதி மூச்சுவரை பணியாற்றியவர்.
மட்டக்களப்பு மக்கள் மட்டுமன்றி, இன அழிப்பை அதிகம் எதிர்கொண்ட தென் தமிழீழ மக்கள் மீதான இனப்படுகொலைகள் பற்றிய விபரங்களை விரல் நுனியில் வைத்திருந்த இவர், அந்த மக்கள் நினைவுகூரப்பட வேண்டும் என்பதிலும், அந்தப் படுகொலை பற்றிய விபரங்களை ஏனையவர்கள், குறிப்பாக இளையோர் அறிந்திருக்க வேண்டும் என்பதிலும் கரிசனை கொண்டிருந்தவர்.
னப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.
எதனையும் நேருக்கு நேர் பேசும் இவரது நடைமுறை காரணமாக, உண்மையை அல்லது மக்களிற்கு பாதகமான விடயங்களைக் கடியும் இவரது குணாம்சம் காரணமாக, பல தடவைகள் பல்வேறு எதிர்புகளையும், இன்னல்களையும் எதிர்கொண்டவர்.
பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகன்.
மட்டக்களப்பில் சிறீலங்கா படையினரது கட்டுப்பாட்டில் இருந்த நகர் பிரதேசத்தல் வாழ்ந்த போதிலும், அவ்வப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் நிருவாகக் கட்டமைப்புக்குள் ஏனைய தென் தமிழீழ ஊடகவியலாளர்களுடன் சென்று அங்குள்ள மக்களின் பிரச்சினைகளையும், கஸ்ரங்களையும் வெளிக்கொண்டு வந்தவர்.
பல இக்கட்டான காலங்களில்கூட இவர் போன்ற ஊடகவிலாளர்கள் (தற்பொழுது நாட்டில் வாழ முடியாது புலம்பெயர்ந்துள்ளவர்கள் உட்பட) மக்களிற்காகவும், அவர்களில் நல்வாழ்விற்காகவும், உரிமைகளுக்காவும் ஆற்றிய, ஆற்றிக்கொண்டிருக்கும் பணிகளை புலம்பெயர்ந்த மக்கள் மறந்துவிடக்கூடாது.
நாட்டுப்பற்றாளர் என ஐய்யத்துரை நடேசன் அவர்கள் மதிப்பளிக்கப்பட்டதன் மூலம் அவர் ஆற்றிய பணியை நாம் எடைபோட முடியும்.