இராணுவமயமாக்கல், உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் இலங்கையில் தொடர்ந்து அதிகரிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்!

You are currently viewing இராணுவமயமாக்கல், உரிமை மீறல்கள் குறித்த கவலைகள் இலங்கையில் தொடர்ந்து அதிகரிப்பு – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்!

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக சவால்கள் மத்தியில் இராணுவமயமாக்கல் மற்றும் உரிமைகள் மீறல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதுடன், பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லும் சமிக்ஞைகள் தென்படுகின்றன என ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 48 வது தொடர் ஜெனீவாவில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமானது. கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான இன்றே இலங்கை குறித்த வாய்மொழி அறிக்கையை ஐ.நா. மனித உரிமை பேரவை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சமர்ப்பித்தார்.

அந்த அறிக்கையிலேயே அவா் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது அறிக்கையில் முழு விபரம் வருமாறு,

மனித உரிமைகள் பேரவையில் இலங்கை குறித்த எனது முன்னைய அறிக்கையில் அடையாளம் காணப்பட்ட போக்குகள் மற்றும் சிக்கல்கள் குறித்து புதுப்பிக்கப்பட்ட தகவல்களை இற்றைப்படுத்துவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்த புதுப்பிக்கப்பட்ட நிலவர அறிக்கையில் அரசாங்கம் அனுப்பிய உள்ளீடுகளையும் கருத்தில் எடுத்துள்ளேன்.

பொறுப்புக் கூறலை உறுதி செய்வதற்காக ஐ.நா.வுடன் இணைந்து அரசு பணியாற்றத் தயாராக உள்ளதாக ஜூன் மாதத்தில் இலங்கை ஜனாதிபதி குறிப்பிட்ட விடயத்தையும் கவனத்தில் கொண்டுள்ளேன். பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்காக ஐ.நா. மனித உரிமைகள் பேரவை மற்றும் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளுக்கு ஏற்ப உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நான் எதிர்பார்க்கிறேன். இதற்கான இலங்கையோடு இணைந்து செயலாற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அலுவலகம் தயாராக உள்ளது.

ஜனவரி 2021 இல் நியமிக்கப்பட்ட தேசிய விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கைகளை விரைவாகவும் பகிரங்கமாகவும் வெளியிடுவதை நான் ஊக்குவிக்கிறேன்.

இலங்கை எதிர்கொள்ளும் தற்போதைய சமூக, பொருளாதார மற்றும் நிர்வாக சவால்கள் மத்தியில் இராணுவமயமாக்கல் மற்றும் உரிமைகள் மீறல்கள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளதுடன், பொறுப்புக்கூறலில் இருந்து விலகிச் செல்லும் சமிக்ஞைகள் தென்படுகின்றன.

ஒகஸ்ட் 30 அன்று இலங்கையில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. உணவுப் பாதுகாப்பு மற்றும் விலைக் கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் அவசர பிரகடனப்படுத்தப்பட்டதாக கூறப்படுகின்றது. அவசரகால விதி மூலம் சிவில் சமூக நடவடிக்கைகளில் இராணுவத்தின் தலையீடு மேலும் அதிகரிக்கலாம் என்ற அச்சங்கள் உள்ளன. இதனை எமது அலுவலகம் உன்னிப்பாகக் கண்காணிக்கும்.

சில சிவில் சமூகத் தலைவர்களுடனான ஜனாதிபதியின் சமீபத்திய சந்திப்பை நான் ஆர்வத்துடன் கவனிக்கிறேன். மேலும் இலங்கையின் சிவில் நிர்வாகத்தை உறுதி செய்வதற்கான பரந்த உரையாடல் மற்றும் நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறேன்.

துரதிஷ்டவசமாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்பங்கள் மீதான கண்காணிப்பு, மிரட்டல் மற்றும் நீதித்துறை துன்புறுத்தல் ஆகியவை இலங்கையில் தொடர்கின்றன. அத்துடன், அரசாங்கக் கொள்கைகளை விமர்சிக்கும் மாணவர்கள், கல்வியாளர்கள், மருத்துவ நிபுணர்கள் மற்றும் மதத் தலைவர்கள் என அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் விரிவடைந்து செல்கின்றன.

பல அமைதியான போராட்டங்கள் மற்றும் நினைவுகூரல்கள் பலவந்தமாக தடுத்து நிறுத்தப்படல், போராட்டங்களில் ஈடுபடுவேரை கைது செய்து தனிமைப்படுத்தல் மையங்களில் தடுத்து வைத்தல் போன்ற செயற்பாடுகளும் அவதானிக்கப்பட்டுள்ளன.

சிவில் சமூகக் குழுக்கள் தொடர்பான அரசின் புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அவை அடிப்படை சுதந்திரம் மீதான கட்டுப்பாடுகளை மேலும் கடுமையாக்கும் என்று பரவலாக அஞ்சப்படுகிறது. இந்நிலையில் புதிய விதிமுறைகள் பகிரங்கப்படுத்தப்பட்டு அது குறித்த விவாதங்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.

பல மனித உரிமை வழக்குகளில் நீதிப் பொறிமுறை குறித்து நான் கவலைப்படுகிறேன். 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 5 மாணவர்கள் உட்பட 11 இளைஞர்கள் கடத்தி காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிரான குற்றச்சாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்லமுடியாது என்ற சட்டமா அதிபரின் முடிவும் கவலைக்குரியது.

பல்வேறு விசாரணைகள் நடைபெறும் போதிலும், 2019 ல் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மதத் தலைவர்கள் உண்மை மற்றும் நீதிக்காக தொடர்ந்து அழைப்பு விடுக்கின்றனர். அந்தத் தாக்குதல் பின்னணி குறித்த முழு விபரத்தை அவர்கள் கோரி வருகின்றனர்.

2011 ஆம் ஆண்டில் சக அரசியல்வாதியைக் கொன்ற குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியதானது சட்டத்தின் ஆட்சி மற்றும் சுயாதீன நீதிப் பொறிமுறை குறித்த நம்பிக்கையை சிதைக்கும் அபாயமும் உள்ளது.

பொலிஸ் காவலில் இடம்பெறும் இறப்புகள் மற்றும் போதைப்பொருள் குற்றத்துடன் தொடர்புடைய குழுக்கள் பொலிஸ் நடவடிக்கைகளில் கொல்லப்படுதல் மற்றும் சட்ட அமுலாக்க பிரிவினரின் தொடர்ச்சியான சித்திரவதைகள் மற்றும் மோசமான நடத்தைகள் குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய சட்ட விதிமுறைகள் ஒருவரை விசாரணையின்றி தன்னிச்சையாக 2 ஆண்டுகள் வரை தடுப்புக் காவலில் வைக்க அனுமதிக்கிறது.

அத்துடன், 300-க்கும் மேற்பட்ட தமிழ் மற்றும் முஸ்லிம் குழுக்கள் மற்றும் தனிநபர்களை பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக அரசு பட்டியலிட்டுள்ளது.

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு, தண்டனை முடிவடையும் தருவாயில் இருந்த 16 கைதிகள் ஜூன் மாதத்தில் மன்னிப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அத்துடன், பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் குறித்த வழக்குகளை மீளாய்வு செய்ய ஆலோசனை வழங்கும் வகையில் ஆணையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த நீண்டகால வழக்குகளுக்கு விரைவான தீர்வை நான் வலியுறுத்துகிறேன்.

பயங்கரவாத தடை சட்டத்தை மீள்பரிசீலனை செய்வதற்கான தனது நோக்கத்தை அரசாங்கம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்காக அமைச்சரவை துணைக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களை கைது செய்யவும் தடுத்து வைக்கவும் இந்தச் சட்டத்தை தொடர்ந்து பயன்படுத்துவது குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன்.

வழக்கறிஞர் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா இந்தச் சட்டத்தின் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாமல் 16 மாதங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்.

அதேபோல, ஆசிரியரும் கவிஞருமான அஹ்னப் ஜஸீம் மே 2020 முதல் குற்றச்சாட்டு இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கிளிநொச்சியில் ஆறாவது பிராந்திய அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுலகம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்களிடையே நம்பிக்கையை ஊக்குவிக்க வேண்டும்.

மனித உரிமைகள் பேரவை 46/1 தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்ட பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களைச் செயல்படுத்துவதைக் கண்காணிப்பதற்கான எனது அலுவலகத்தின் பணிக் குழுவிற்கான ஆட்சேர்ப்பு நிலுவையில் உள்ளது. ஏற்கனவே ஐ.நாவிடம் உள்ள 120,000 ஆதாரங்களுடன் தகவல் களஞ்சியத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். மேலும் இந்த ஆண்டு முடிந்தவரை தகவல் சேகரிப்பைத் தொடங்குவோம். இதற்குத் தேவையான நிதி ஆதரவை அளிப்பதை உறுதி செய்ய உறுப்பு நாடுகளை நான் கேட்டுக்கொள்கிறேன். இதன்மூலம் எனது அலுவலகம் இந்த வேலையை முழுமையாக செயல்படுத்த முடியும்.

அத்துடன் பேரவை உறுப்பு நாடுகள்இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தவும், நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவதில் நம்பகமான முன்னேற்றத்துக்கு வழி தேடவும் நான் ஊக்குவிக்கிறேன்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply