ராயப்பு யோசப் ஆண்டகை தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு சிவில் சமூக அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், குறித்த நாளை துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம் உள்ளிட்ட வடக்கு கிழக்கு சிவில் சமூகங்கள் இணைந்து வெளியிட்டள்ள அறிக்கையில்,
“மன்னார் மறைமாவட்டத்தின் ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை இயற்கை எய்திய செய்தியானது தமிழர் தேசத்தினை ஆழாத்துயரில் ஆழ்த்தியுள்ளது. ஆயரின் இழப்பானது தமிழர் தேசத்திற்கு அளவிடமுடியாத ஒரு பேரிழப்பாகும்.
2009ஆம் ஆண்டு யுத்தம் மௌனிக்கபட்ட பின்னர் தமிழர் தேசம் திக்கற்றவர்களாக நின்ற நேரத்தில் அவர்களுக்கு நம்பிக்கை ஒளியாக விளங்கியவர்.
தமிழினத்தின் மீதான இனப்படுகொலையை, இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்டபொது மக்களின் எண்ணிக்கையை பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் பொது வெளியிலும் சர்வதேசத்திலும் அறுதியிட்டு தெரிவித்தவர். பாதிக்கப்பட்ட தமிழினத்தின் நீதிக் குரலாக, சாட்சியாக இருந்த மிகப்பெரும் ஆளமையை நாம் இன்று இழந்து நிற்கின்றோம்.
இந்நிலையில், ஆண்டகையின் மறைவையொட்டி அவரால் தமிழ் தேசியத்திற்கு ஆற்றிய சேவைகளுக்கு மதிப்பளிக்கும் விதமாக இன்று முதல் இறுதி வணக்க நிகழ்வு வரை வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசம் எங்கும் துக்க தினங்களாக அனுஷ்டடிக்கப்படும். அத்துடன், எதிர்வரும் திங்கட்கிழமை தமிழ் தேசிய துக்க தினமாகவும் பிரகடனபடுத்தப்படுத்துகின்றோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, அதே நாளில் தமிழகம் மற்றும் புலம்பெயர் தேசம் எங்கும் வாழும் தமிழ் மக்களும் கறுப்புப்பட்டி அணிந்து தங்கள் துக்கத்தை வெளிப்படுத்துமாறு சிவில் சமூக அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதன்படி, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கம், வட-கிழக்கு சிவில் சமூக சம்மேளனம், வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு, பல்சமயங்களின் ஒன்றியம்-மட்டக்களப்பு, முதியோர் சம்மேளனம்-மட்டக்களப்பு, வெண்மயில் அமைப்பு-மட்டக்களப்பு, அமெரிக்கன் மிஷன்-மட்டக்களப்பு, சடோ லங்கா நிறுவனம்-மட்டக்களப்பு, அரச சாரா தொண்டு நிறுவனங்களின் இணையம், தமிழர் நலன் காப்பகம்-மட்டக்களப்பு, சிவகுரு ஆதீனம்-யாழ்ப்பாணம், தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு-மட்டக்களப்பு, புழுதி சமூக உரிமைக்கான அமைப்பு-திருகோணமலை, குரல் அற்றவர்களின் குரல் அமைப்பு, உலக தமிழர் மாணவர் ஒன்றியம், இராவண சேனை-திருகோணமலை, வடக்கு கிழக்கு பொது அமைப்புகள் மற்றும் சம்மேளனங்கள் இந்த அழைப்பை விடுத்துள்ளன.