இலங்கைக்கு உதவிகள் விரைவில் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்தியா அதிகளவு நேரத்தை செலவிடுகின்றது என இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தனது மோசமான நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள வேளையில் இலங்கைக்கு நேரமே மிக முக்கியமானது என்பதை ஏற்றுக்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கைக்கான தனது உதவிகளை துரிதப்படுத்துவதற்காக இந்தியா மேலதிக நேரத்தை செலவிடுகின்றது என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறன சூழ்நிலையில் வழமையான வேகத்தில் நடவடிக்கைகளை எடுக்கமுடியாது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் அனைத்தையும் துரிதமாக செய்யவேண்டும்,இதன் காரணமாக நாங்கள் மேலதிக நேரத்தை செலவிடுகின்றோம்,முன்னர் பல வாரங்கள் நீடித்திருக்க கூடிய நடவடிக்கைகளை தற்போது ஒரு சில நாட்களில் பூர்த்தி செய்கின்றோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது இலங்கை விஜயத்தின் இறுதியில் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் உள்ள இந்திய பத்திரிகையாளர்களுடன் கருத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டவேளை அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சமீபத்தில் உறுதிசெய்யப்பட்ட அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதிக்கான இந்தியாவின் ஒரு பில்லியன் டொலர் கடனுதவி விரைவில் நடைமுறைக்கு வரும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு அதிகளவு வழங்கும் நாடாக இந்தியாக காணப்படாவிட்டாலும்,இலங்கையின் நெருங்கிய அயல்நாடு இந்தியா என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடியை நல்ல அயலவனை போல நாங்கள் விவேகமான முறையில் அணுகுகின்றோம் என தெரிவித்துள்ள ஜெய்சங்கர்,அரசியலை தவிர்த்துள்ளோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா வழங்கியுள்ள கடனுதவிகள் உட்பட நிதி உதவிகளை சுட்டிக்காட்டியுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் நாங்கள் வேறு ஒரு நாட்டிற்கும் இவ்வாறு உதவி புரிந்ததாக எனக்கு நினைவில்லை என தெரிவித்துள்ளார்.
நாங்கள் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட நாடுகளிற்கு உதவியிருக்கின்றோம் ஆனால்இது வித்தியாசமானது என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் அதேவேளை இலங்கைக்கு மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன என்பதையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் இந்தியாவின் தனியார் துறை முதலீடுகள் உட்பட இந்திய முதலீடுகள் இலங்கையின் ஒட்டுமொத்த நிலையை வலுப்படுத்தியுள்ளன என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் நெருங்கிய அயல்நாடு இவ்வளவு முதலீட்டை இங்கு மேற்கொள்கின்றது என்பதே ஒரு செய்தியை தெரிவிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவின் அதானி குழுமம் இலங்கையின் எரிசக்தி துறையில் பின்கதவால் நுழைந்துள்ளதாக இலங்கையின் எதிர்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இந்திய அரசாங்கம் இங்கு தனியார் துறை முதலீடுகளை மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
திருகோணமலை எண்ணெய் குத அபிவிருத்தி என்பது அரசாங்கங்களிற்கு இடையிலான புரிந்துணர்வை அடிப்படையாக கொண்டது, என தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தின் போது இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கையின் தலைமைத்துவம்,சிரேஸ்ட அமைச்சர்கள் எதிர்கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுடனான பேச்சுவார்த்தைகளின் போது பெருமளவிற்கு பொருளாதாரம் தொடர்பான விடயங்கள் குறித்து ஆராயப்பட்ட அதேவேளை இரு தரப்பிற்கும் முக்கியம் வாய்ந்த விடயங்கள் குறித்தும் ஆராயப்பட்டது என இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்திருந்தது.
இந்த சந்திப்பின்போது இலங்கை ஜனாதிபதி யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தமிழ்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பு குறித்து தெளிவுபடுத்தியிருந்தார்.
பின்னர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவினர் இந்திய வெளிவிகார அமைச்சரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டிருந்தனர்.
அரசியல் கைதிகள் விடுதலை,நிலங்கள் காணாமல்போனவர்கள் மற்றும் அபிவிருத்தி உட்பட நான்கு விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன,இவை நீண்டகாலமாக தமிழர்களின் கரிசனைக்குரிய விடயங்களாக காணப்படுகின்றன-நடவடிக்கை எடுக்கப்படவேண்டிய சில விடயங்கள் குறித்து இரு தரப்பும் ஆராய்ந்து தீர்மானித்துள்ளன, முன்நோக்கிநகர்வதற்கான வாய்ப்புள்ளதால் ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை தொடர்ந்து முன்னெடுப்பது சிறந்தது என நாங்கள் கருதுகின்றோம் என இந்திய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயங்கள் குறித்து நடவடிக்கைகளை எடுப்பது நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்,ஆனால் இது உரையாடலின் முடிவல்ல என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் அரசியல் தீர்வு இன்னமும் எட்டப்படாமலுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.