அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர். வர்மா இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தோ-பசுபிக் முக்கிய பங்காளர்களுடன் அமெரிக்காவின் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்காக அவர் 18ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரையில் இந்தியா, மாலைதீவு மற்றும் இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் இந்தோ-பசுபிக் மூலோபாயத்தின் இரண்டு ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு அவரது பயணம் இடம்பெறுவதோடு திறந்த, பாதுகாப்பான மற்றும் வளமான பிராந்தியத்திற்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில் அது அமையவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்தியாவின் புதுடில்லிக்கு முதலில் விஜயம் செய்யவுள்ள அவர் அங்குப் பொருளாதார மேம்பாடு, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் உட்பட நெருக்கடிகளிலிருந்து அமெரிக்க-இந்திய உலகளாவிய மூலோபாய கூட்டாண்மையை முன்னேற்றுவதற்காக மூத்த அரச அதிகாரிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் தொழில்முனைவோரைச் சந்திக்கவுள்ளார்.
இதன் பின்னர், இந்தியாவிலிருந்து, அவர் மாலைதீவின் தலைநகர் மாலேவுக்குச் செல்லவுள்ளதோடு அங்கு, மூத்த அதிகாரிகளைச் சந்தித்து, பொருளாதார ஒத்துழைப்பை அதிகரிப்பதிலும், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
அத்துடன், அமெரிக்காவிற்கும் மாலைதீவிற்கும் இடையிலான மக்களிடையேயான உறவுகளை மேலும் அதிகரிக்க உதவும் வகையில் மாலேயில் புதிய அமெரிக்க தூதரகத்திற்கான திட்டமிடப்பட்ட அலுவலக பகுதியை பார்வையிடவுள்ளார்.
இதனையடுத்து மாலேயிலிருந்து கொழும்புக்கு விஜயம் செய்யவுள்ள அவர், மூத்த அதிகாரிகளுடனான சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளார்.
குறிப்பாக, அமெரிக்க- இலங்கை பாதுகாப்பு மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆதரிக்கும் வகையில் அவரது விஜயம் அமையவுள்ளதோடு, கொழும்பை ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக மாற்றுவதற்கு அமெரிக்கா 553 மில்லியன் டொலர்கள் நிதியுதவி அளிக்கும் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்திற்கான விஜயத்தையும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.