இந்தியா இலங்கையின் நம்பிக்கை மிக்க நட்பு நாடாகவும் பங்காளியாகவும் செயற்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார்.கொழும்பில் நடைபெற்ற இந்திய-இலங்கை பாதுகாப்பு தொடர்பான இரண்டாவது செயலமர்வின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
“எங்கள் இருதரப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து, பன்முகப்படுத்தப்பட்டு வருகின்றது. இந்தியா வளர்ந்து வரும் தேசிய திறன்களால் வலுப்பெற்றுள்ளது.
உட்கட்டமைப்பு மற்றும் இணைப்பு, ஆழமான பொருளாதார ஈடுபாடு, வர்த்தகம் மற்றும் முதலீடு, கலாச்சாரம் மற்றும் கல்வி, சுற்றுலா மற்றும் மக்களிடையேயான உறவுகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நாங்கள் ஒத்துழைப்பை வழங்குகிறோம்.
நமது பகிரப்பட்ட நாகரீகம், பொதுவான பாரம்பரியம் மற்றும் வலுவான கலாச்சார இணைப்புடன், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பு என்பது விருப்பம் மட்டுமல்ல, கொள்கை மற்றும் SAGAR தொலைநோக்குப் பார்வையால் வழிநடத்தப்படும் ஒரு தேவையாகும்.” எனவும் வலியுறுத்தியுள்ளார்.
பாதுகாப்பில் தன்னிறைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்த சந்தோஷ் ஜா, இலங்கை உட்பட அண்டை நாடுகளுக்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் ஆர்வத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார்.
“இந்தியாவின் வளர்ந்து வரும் திறன்கள் எங்கள் அண்டை நாடுகளுக்கு பயனளிக்கும். இலங்கை ஆயுதப்படைகளின் தேவைகளை ஆதரிப்பதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.