இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி நாட்டில் இருக்கும் ஒவ்வொரு தனிமனிதனையும் பொருளாதார ரீதியாக -அரசியல் ரீதியாக- சமூக ரீதியாக பாதித்துக்கொண்டிருக்கிறது.
போர் காலங்களைப் போலவே தற்போதும் மக்கள் இலங்கையில் வாழ முடியாது என எண்ணி படகு வழியாக இந்தியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் தஞ்சமடையும் நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. இந்தியாவில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் தஞ்சமடைந்திருக்கின்றனர்.
அவுஸ்திரேலியாவுக்கு ஐநூற்றுக்கும் மேற்பட்டோர் செல்ல முயன்று இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டிருக்கின்றனர். இதில் குறிப்பிடத்தகுந்த பேர் அவுஸ்திரேலிய கடல் பகுதிக்குள் சென்ற போதிலும் மீண்டும் இலங்கைக்கே நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். இதில் பெரும்பாலானோர் ஈழத்தமிழர்கள்.
அவுஸ்திரேலியாவுக்கு இலங்கையிலிருந்து அகதிகள் வருவது கருத்தில் கொண்டுள்ள அவுஸ்திரேலிய அரசு, ஆயிரக்கணக்கான டொலர்களை படகு வழியாக வருபவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காக இலங்கை அரசுக்கு வழங்கியுள்ளது. இலங்கை மீன்பிடி படகுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஜி பி எஸ் கருவிகளை பொருத்தவதற்கான உதவிகளை அவுஸ்திரேலிய அரசு வழங்குகிறது.
அந்த வகையில், இலங்கையிலிருந்து தமிழ் மக்கள் வெளியேறும் சிக்கலை சட்ட ஒழுங்கு பிரச்சனையாகவே அவுஸ்திரேலிய அரசு அணுகுகிறது என்பதை உணர்த்துகிறது. உண்மையில், அது சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு அப்பாலான நீண்டகால அரசியல் இன ஒடுக்குமுறை பிரச்சினை.
தி கார்டியன் ஊடகத்தில் முன்னாள் அகதியும் பத்திரிகையாளருமான பெஹ்ரூஸ் பூச்சானி எழுதியுள்ள கருத்துக் கட்டுரையில், ‘பிரியா- நடேசலிங்கம் எனும் இலங்கைத் தமிழ் அகதி குடும்பத்தின் கதை பரவலாக அவுஸ்திரேலிய மக்களுக்கு தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக அவர்கள் தடுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்கள். இந்த விடுதலையை பொதுமக்கள் (தொழிற்கட்சியின்) சாதனையாக கொண்டாடினார்கள், ஆனால் உண்மையில் எவ்வித அடிப்படை மாற்றமும் நிகழவில்லை. பிற அகதிகள்/தஞ்சக்கோரிக்கையாளர்கள் விடுவிக்கப்படவில்லை. அரசின் கொள்கை மாறவில்லை’ என குறிப்பிட்டுள்ளார்.
இந்த முரண்பாடு வெள்ளை மீட்பர் கலாச்சாரத்தின் அடிப்படை அம்சமாகும். கருப்பினத்தவர்கள் அல்லது பிற இனத்து மக்களை காப்பாற்றும் மீட்பர்களாக வெள்ளையர்கள் தங்களை தாங்களே கருதிக்கொள்வதே வெள்ளை மீட்பர் கலாச்சாரம் எனப்படுகிறது. இந்த கலாச்சாரம், தொடரும் அவுஸ்திரேலிய குடிவரவுக் கொள்கையின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது என முன்னாள் அகதி பெஹ்ரூஸ் பூச்சானி விமர்சித்திருக்கிறார். இது புதிதாக பொறுப்பேற்றுள்ள தொழிற்கட்சி தலைமையிலான அவுஸ்திரேலிய அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தாகும்.
ஆதலால் அவுஸ்திரேலிய அரசு மற்றும் இன்னும் பிற மேற்குலக நாடுகள் தமிழ் அகதிகள் வருகையை இனப்படுகொலை குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள இலங்கை அரசின் கண்கொண்டு பார்க்காமல் மனிதாபிமான அல்லது தமிழர்கள் கண்கொண்டு பார்க்க வேண்டும். அதுவே நியாயமானது. அண்டை நாடான இந்தியா குறைந்தபட்சம் 30 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் தங்கியுள்ள தமிழ் அகதிகளின் குடியுரிமை கோரிக்கையினை பரிசீலிக்க வேண்டும். இது காலத்தின் தேவை.