இரு தேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசாங்கம் உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய முடியுமென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சுரேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும்,
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஆகிய நாம், இரு தேசங்களின் கூட்டான – ஒரு நாடு என்கின்ற கோட்பாட்டினை முன்வைத்து அக்கொள்கையை அடைந்து கொள்வதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.
இன்று இலங்கைத் தீவினை மையமாக வைத்து ஒரு பூகோள அரசியல் போட்டி இடம்பெறுகின்றது. அந்தப் பூகோள அரசியலில் தமிழ் மக்களுக்கும் காத்திரமான இடமுண்டு. அப்போட்டியூடாக தமிழர்களுக்கு கிடைக்கும் முக்கியத்துவமானது தமிழர்களுக்கான நிகரற்ற பேரம்பேசும் சக்தியாகும்.
எனவே அதனை அடிப்படையாக வைத்து, தமிழ் மக்களின் அரசியல் நலன்களை முன்னிலைப்படுத்தி சர்வதேச அரசியலை கையாளுமிடத்து தமிழ்த் தேசத்திற்கான அங்கீகாரத்தினை பெற்றுக்கொள்ளலாம் என்பது எமது திண்ணமான நிலைப்பாடு.
தமிழ் மக்களின் நலன்கள், அவர்களது தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, என்பவற்றின் அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் இறைமை அங்கீகரிக்கப்படுவதன் மூலமே உறுதிப்படுத்தப்பட முடியும்.
இதனை ஸ்ரீலங்கா என்கின்ற வலுவான இனவாத சிந்தனை வயப்பட்ட தற்போதுள்ள அரச கட்டமைப்பு முறைக்குள் அடைய முடியாது. இங்கு அரசு மீளுருவாக்கம் இடம்பெற்று, தேசங்களின் கூட்டாக, ஆகக் குறைந்தது தமிழ் சிங்கள தேசங்களின் இறைமைகளைக் கூட்டுச் சேர்த்த இருதேசங்கள் கொண்ட ஒரு நாடாக இலங்கை அரசாங்கம் உருவாக்கப்படுவதன் மூலமே தமிழ் மக்களின் நலன்களை பாதுகாக்கக்கூடிய தீர்வை அடைய முடியும்.
தமிழ்த் தேசம் எனும் அந்தஸ்த்து அங்கீகரிக்கப்படல் வேண்டுமென்பதிலும், அவ்வந்தஸ்து சமரசத்திற்கு அப்பாற்பட்டது என்பதிலும் நாம் உறுதியாக உள்ளோம்.
சர்வதேச சமூகமானது தமது பிராந்திய நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இலங்கை அரசாங்கம் மீது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு தமிழர்களது உரிமைப் போராட்டத்தை பயன்படுத்தும் என்று, நாம் எமது 2010 தேர்தல் அறிக்கையில் எதிர்வு கூறியது நடந்தேறியது.
இந்நிலையானது, பூகோள அரசியலின் விளைவால் வடிவ மாற்றத்தோடு தொடருவதற்கான வாய்ப்புகளுண்டு. இதன் காரணமாகவே தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்கள் தமது அடிப்டை கொள்கைகளான தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, தனித்துவமான இறைமை கொண்ட தேசம், என்பவற்றை விட்டுக் கொடுக்காமல் உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது. வ்வாறு உறுதியாக இருந்தாலே சர்வதேச சமூகம் தமது நலன்களை அடைவதற்காக தமிழர்களது பிரச்சினையை கையில் எடுக்கும் பொழுது, தமிழ் மக்களும் தமது நலன்களை அடைவதற்கு அதனைப் பயன்படுத்த முடியும் – என்றார்