சிங்கள ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நிர்வாகத்தின் கீழ் இலங்கையில் மனித உரிமை நிலவரம் மோசமடைந்துள்ளது என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தனது வருடாந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கடந்த காலத்தில் மனித உரிமைமீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் சட்டத்தரணிகள் பத்திரிகையாளர்கள் மீதான கண்காணிப்பபை அச்சுறுத்தலை படையினர் அதிகரித்துள்னர் முஸ்லீம்கள் மற்றும் தமிழ் மக்களை பாரபட்சம் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
நீதித்துறையின் சுயாதீனத்தை பலவீனப்படுத்தும் மனித உரிமை ஆணைக்குழு போன்ற கண்காணிப்பு அமைப்புகளை பலவீனப்படுத்தும் அரசமைப்பும் மாற்றங்களை அரசாங்கம் முன்னெடுத்தது என சர்வதேசமனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மனித உரிமை விவகாரங்களில் சாதிக்கப்பட்ட முன்னேற்றங்களை ராஜபக்ச அரசாங்கம் வேகமாக இல்லாமல் செய்துள்ளது என தெரிவித்துள்ள மனித உரிமை கண்காணிப்பகத்தின் தென்னாசியாவிற்கான இயக்குநர் மீனாக்சி கங்குலி ராஜபக்ச அரசாங்கம் சிறுபான்மை சமூகத்தினரை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளியுள்ளது கடந்த காலங்களில் மனித உரிமை துஸ்பிரயோகங்களிற்கு உள்ளானவர்கள் அச்சமடைந்துள்ளதுடன் கருத்து தெரிவிப்பதற்கு அச்சமடைந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நிர்வாக நடவடிக்கைகளிற்கு பொறுப்பாக இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டமையும்,உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்த சர்வதேச சமூகத்திற்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை கைவிட்டமையும் யுத்தத்திற்கு பின்னர் சாதிக்கப்பட்ட சிறிய அளவிலான நல்லிணக்கத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பரவலான மனித உரிமை மீறல்கள் காணப்ட்ட கடந்த காலத்திற்கு திரும்புவதை தடுப்பதற்குகரிசனையுள்ள அரசாங்கங்கள் தங்களால் முடிந்த அனைத்தையும் செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள மீனாக்சி கங்குலி அரசாங்கங்கள் மனித உரிமை மீறல்களிற்கு எதிராக குரல் கொடுக்கவேண்டும், பொறுப்புக்கூறல்ஆதாரங்களை பாதுகாக்கும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை தீர்மானத்திற்கு முயலவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.