இலங்கையில் மோசமடையும் மனிதவுரிமை!கனடா

You are currently viewing இலங்கையில் மோசமடையும் மனிதவுரிமை!கனடா

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் கனடா ஆழ்ந்த கவலையை இன்று வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன், போரில் இழைக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பில் இலங்கை பொறுப்புக் கூற வேண்டியதன் அவசியத்தையும் கனடா வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46 வது அமர்வில் உயர்மட்டப் பிரிவில் இன்று பேசிய கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ இலங்கை தொடர்பான கவலைகளை வெளிப்படுத்தினார்.

இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை குறித்து கனடா ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், சிவில் சமூக அமைப்பினர் மீதான அச்சுறுத்தல்கள், நினைவுகூரலுக்கான தடை, கொரோனாவால் உயிரிழக்கும் சிறுபான்மை மக்களின் உடல்கள் பலவந்தமாகத் தகனம் செய்யப்படுவது போன்றவை குறித்து நாங்கள் சரிசனை கொண்டுள்ளோம் எனவும் மார்க் கார்னியோ தெரிவித்தார்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்களுக்கு பொறுப்புப் கூற வேண்டியதன் அவசியத்தை ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் சமீபத்திய அறிக்கை ஆழமாக வெளிப்படுத்தியுள்ளது.

பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அமைதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு கனடா தொடர்ந்து ஆதரவளிக்கும் எனவும் கனேடிய வெளிவிவகார அமைச்சர் கூறினார்.

துரதிர்ஷ்டவசமாக, தொற்றுநோய் நெருக்கடியை ஒரு சாக்காகப் பயன்படுத்தி மனித உரிமைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் போக்கு சில நாடுகளில் அதிரித்து வருகிறது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது.

இலங்கையிலும் தொற்று நோய்க்கு மத்தியில் அதிகரித்துவரும் இராணுவ மயமாக்கல் குறித்து சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் கரிசனை கொண்டுள்ளதை நாங்கள் அவதானிக்கிறோம்.

இலங்கையில் அனைத்து சிவில் சேவைகளிலும் அதிகரித்துவரும் இராணுவ தலையீடு சட்டத்தின் ஆட்சி குறித்த கவலைகளை எழுப்புகிறது எனவும் கனடா வெளிவிவகார அமைச்சர் மார்க் கார்னியோ தெரிவித்தார்

பகிர்ந்துகொள்ள