இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் இருப்பு மற்றும் இந்திய கடற்படையின் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக, இலங்கையில் ரேடார் தளத்தை அமைப்பது குறித்து சீனா பரிசீலித்து வருவதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கூடங்குளம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையங்கள் உட்பட நாட்டின் தென் பகுதியில் உள்ள மூலோபாய சொத்துக்களும் இதன்மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து ஏறக்குறைய 1,109 மைல்களுக்கு அப்பால் உள்ள டியாகோ கார்சியா தீவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைகளை குறித்த ரேடாரால் கண்காணிக்க முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் தேவேந்திர முனைக்கு அருகிலுள்ள காடுகளில் சீன விஞ்ஞான வான்வெளி தகவல் ஆராய்ச்சி நிறுவனம் இந்த திட்டத்தில் ஈடுபடலாம் என்று அந்த செய்தி தெரிவிக்கிறது.