இலங்கையில் 3வது கொரோனா அலை அபாயம்!

You are currently viewing இலங்கையில் 3வது கொரோனா அலை அபாயம்!


இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பல இடங்களில் கொரோனாத் தொற்றின் 3வது அலை உருவாகும் அபாயம் காணப்படுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு மக்களின் நடமாட்டம் அதிகரித்திருந்ததன் பின்னணியில் இலங்கையில் கொரோனா 3வது அலை உருவாகும் அபாயம் உணரப்பட்டுள்ளது.

இதையடுத்து சமூகத்தில் நடமாடிவரும் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களை அடையாளம் காண்பதற்காக நேற்று (ஏப்-20) முதல் மீண்டும் எழுமாறான பரிசோதனைகளை மேற்கொள்ள சுகாதார தரப்பு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய கொழும்பு நகரில் மேற்கொள்ளப்பட்ட எழுமாறான பரிசோதனைகளின் போது 18 பேருக்கு கொவிட் தொற்றுறுதியானமை கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் தொற்று நோய் தடுப்பு விசேட நிபுணர் வைத்தியர் தினுகா குருகே இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட்-19 பரவல் அதிகரித்துள்ள நிலையில் தீவிர சிகிச்சை பிரிவுகளில் நோயாளர்கள் அனுமதிக்கப்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் முன்னதாக கொரோனா வைரஸ் கண்டறியப்படாத பகுதிகளில் கடந்த சில நாட்களில் நோயாளர்கள் அடையாளங்காணப்பட்டதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் தற்போது விஞ்ஞான ரீதியான தரவுகளை மீளாய்விற்கு உட்படுத்தல் மற்றும் தகவல்களை ஆராயும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் அதிகரித்து வரும் கொவிட்-19 பரவல் நிலைமை தொடர்பில் பொது மக்கள் அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும் என சுகாதார பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை, புத்தாண்டு காலத்தின் பின்னர், கொவிட்-19 தொற்றுறுதியானர்களின் எண்ணிக்கை 8 வீதமளவில் அதிகரித்துள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி ருவான் விஜேமுனி தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு காலத்தில் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் தொடர்பில் கருத்திற்கொள்ளாமல் பொதுமக்கள் செயற்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போதைய நிலைமையை கட்டுபாட்டுக்குள் கொண்டுவரத் தவறினால், கொவிட் மூன்றாம் அலை ஏற்படும் அச்சம் உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் மேல் மாகாணங்களின் சில பகுதிகளில் கொரோனா உப கொத்தணிகள் உருவாகும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக கொரோனா மூன்றாம் அலை உருவாகுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு கால கவனயீனமான செயற்பாடுகளின் சாதகமற்ற பிரதிபலன்களை ஏப்ரல் மாத இறுதி வாரத்திலும், மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்களிலும் காணக்கூடியதாக இருக்கும்.

எனவே, தற்போது பதிவாகும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கும், அவர்களின் மூலமான பரவலைக் கட்டுப்படுத்துவதற்கும் பொதுமக்களின் ஒத்துழைப்பைக் கோருவதாக பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.

மக்கள் சுகாதார வழிகாட்டல்களை உரிய முறையில் பின்பற்றி, தொற்று பரவலை தடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் கோரியுள்ளார்.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply