இலங்கையை கண்காணிக்க விசேட நிபுணத்துவப் பொறிமுறை!

You are currently viewing இலங்கையை கண்காணிக்க விசேட நிபுணத்துவப் பொறிமுறை!

ஜெனிவாவில் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கூட்டத்தொடரின்போது இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு மிகமுக்கிய காரணமாக அமைந்திருக்கக்கூடிய கரிசனைக்குரிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் விசேட நிபுணத்துவப்பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டுமென சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியிருக்கின்றது.

இலங்கை பாரிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் தோற்றம்பெற்றுள்ள மனித உரிமைகள்சார் நெருக்கடிகள், மக்கள் போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் முறையற்ற பயன்பாடு, உண்மை, நீதி மற்றும் இழப்பீடு ஆகியவற்றை உறுதிப்படுத்தும் பொறிமுறையில் குறிப்பிடத்தக்களவிலான முன்னேற்றம் எட்டப்படாமை ஆகிய விடயங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டி விரிவான அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, இவ்வாறானதொரு பின்னணியில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் வகிபாகம் எத்தகையதாக அமையவேண்டும் என்றும் அதில் விளக்கமளித்திருக்கின்றது.

அதன்படி ’12 ஆம் திகதி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகும்போது இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஆதாரங்களைத் திரட்டுதல், ஆராய்தல் மற்றும் அவற்றை உரியவாறு பாதுகாத்தல் ஆகியவற்றுக்கு ஏதுவான வகையில் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் பொறிமுறையை மேலும் வலுப்படுத்துமாறும் இலங்கையின் தற்போதைய நெருக்கடிக்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கக்கூடிய மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் கண்காணிப்பதற்கும், அறிக்கையிடுவதற்கும், பரிந்துரைகளை முன்வைப்பதற்கும் விசேட நிபுணத்துவப் பொறிமுறையொன்றை நிறுவுமாறும் நாம் வலியுறுத்துகின்றோம்’ என்று அவ்வறிக்கையில் மன்னிப்புச்சபை தெரிவித்திருக்கின்றது.

அதுமாத்திரமன்றி இலங்கையின் தற்போதைய நிலைவரத்தின் தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்டு, மேற்படி நடவடிக்கைகளை முன்னெடுக்கவேண்டியதன் அவசியத்தை ஏற்றுக்கொள்ளுமாறும் அதற்கமைய இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் உறுப்புநாடுகளிடம் சர்வதேச மன்னிப்புச்சபை கோரிக்கைவிடுத்திருக்கின்றது.

இலங்கை அதன் சர்வதேசக்கடப்பாடுகளிலிருந்து மேலும் பின்வாங்குவதைத் தடுப்பதற்கு இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் சர்வதேச மட்டத்திலான கண்காணிப்பையும் அறிக்கையிடலையும் மேற்கொள்வது இன்றியமையாததாகும் என்று அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபை, எனவே அதன் முதற்கட்டமாக இலங்கை தொடர்பில் வருடாந்தம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை சமர்ப்பிக்கக்கூடிய விசேட நிபுணத்துவப்பொறிமுறையொன்றை நிறுவக்கூடிய தீர்மானமொன்று நிறைவேற்றப்படவேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றது.

பகிர்ந்துகொள்ள

Leave a Reply