மத சிறுபான்மையினருக்கு எதிராக பௌத்த பிக்குகளால் தூண்டப்பட்ட ஒடுக்குமுறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருக்கிறது. இலங்கையின் மதச்சுதந்திரம் தொடர்பான வருடாந்த அறிக்கையில் அமெரிக்க ஆணைக்குழு சுட்டிக்காட்டும் பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் தவறியிருப்பதாக தமது வருடாந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியிருக்கும் சர்வதேச மதச் சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு, மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்குமாறு ஜோ பைடன் தலைமையிலான அரசாங்கத்துக்குப் பரிந்துரை செய்துள்ளது.
2023ஆம் ஆண்டில் சர்வதேச நாடுகளின் மதச்சுதந்திரப்போக்கு எத்தகைய மட்டத்தில் காணப்பட்டது, அந்நாடுகளின் மதச்சுதந்திர நிலைவரம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கம் முன்னெடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பன உள்ளடங்கலாக மதச்சுதந்திரம் தொடர்பில் விரிவான தகவல்களை உள்ளடக்கிய 102 பக்க வருடாந்த அறிக்கையை மதச்சுதந்திரம் தொடர்பான அமெரிக்க ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அவ்வறிக்கையில் இலங்கையின் நிலைவரம் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:
இலங்கையின் மதச்சுதந்திர நிலைவரம் 2023இலும் தொடர்ந்து பின்னடைவை சந்தித்தது. இலங்கை அரசாங்கம் மத சிறுபான்மையினரை தொடர்ச்சியாக ஒடுக்கியும், அச்சுறுத்தியும் வந்திருப்பதுடன், சிலவேளைகளில் அவர்களது வழிபாட்டுத்தலங்களுக்குள் பிரவேசிப்பதற்கு அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
தேவாலயங்களைப் பதிவுசெய்வதில் கிறிஸ்தவ சமூகம் சிக்கல்களுக்கு முகங்கொடுத்தது. அதுமாத்திரமன்றி மத சிறுபான்மையினரை இலக்குவைப்பதற்கும், கண்காணிப்பதற்கும், தடுத்துவைப்பதற்கும் அரசாங்கம் அடக்குமுறைச் சட்டங்களைப் பயன்படுத்தியது. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களின் பின்னர் குறிப்பாக முஸ்லிம்களைக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்பட்ட பரந்துபட்ட அதிகாரங்களைக் கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர்.
2023ஆம் ஆண்டு முழுவதும் பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சமவாயச்சட்டம் (ஐ.சி.சி.பி.ஆர்) ஆகியவற்றின்கீழ் நபர்களைப் பலவந்தமாக தடுத்துவைத்ததன் ஊடாக இலங்கை அரசாங்கம் மதச்சுதந்திரத்தை வெகுவாக மட்டுப்படுத்தியது. புத்த பெருமானின் புனித தந்ததாது அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதாகக்கூறி 2023 ஜனவரியில் யூடியூப் பதிவரான சேபால் அமரசிங்க கைதுசெய்யப்பட்டார். அதேபோன்று பௌத்த மற்றும் கிறிஸ்தவ மதங்களை அவமதித்தாகக் கூறி நகைச்சுவைப் பேச்சாளரான நடாஷா எதிரிசூரிய 2023 மே மாதம் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டார்.
அதேவேளை கடந்த ஆண்டு முழுவதும் தொல்பொருள் திணைக்களமானது பௌத்த பிக்குகள் மற்றும் ஏனைய அரச கட்டமைப்புக்களுடன் ஒன்றிணைந்து பௌத்த விகாரைகளை நிர்மாணிப்பதற்காக வட, கிழக்கு மாகாணங்களில் இந்து மற்றும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகளை ஆக்கிரமித்தது.
2023 மார்ச்சில் பௌத்த பிக்குகள் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் இணைந்து திருகோணமலையில் புத்தர் சிலையொன்றை நிறுவுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டனர். அதற்கு எதிராகப் போராட்டம் மேற்கொண்ட தமிழ், முஸ்லிம்களை சுட்டுத்தள்ளுவோம் எனக்கூறி அச்சுறுத்தினர். அடுத்ததாக குருந்தூர்மலை ஆலய விவகாரத்தில் 2022ஆம் ஆண்டு நீதிபதி ரி.சரவணராஜாவினால் வழங்கப்பட்ட உத்தரவு 2023 செப்டெம்பரில் தொல்பொருள் திணைக்களத்தினால் மீறப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரச்சுறுத்தல் எனக் குறிப்பிட்டு பதவியை இராஜினாமா செய்த நீதிபதி சரவணராஜா, நாட்டைவிட்டு வெளியேறினார். அதுமாத்திரமன்றி பல்வேறு சந்தர்ப்பங்களில் பௌத்த பிக்குகளால் மத சிறுபான்மையினருக்கு எதிராகத் தூண்டப்பட்ட அமைதியின்மை மற்றும் வன்முறைகளைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவறியிருக்கின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் மதச்சுதந்திரத்துடன் தொடர்புடைய விவகாரத்தில் இலங்கையை விசேட கண்காணிப்புப் பட்டியலில் சேர்த்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குமாறு அல்லது சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிக்கும்படி கொழும்பிலுள்ள அமெரிக்கத்தூதரக அதிகாரிகளிடம் வலியுறுத்தல், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51/1 தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான அழுத்தம் பிரயோகித்தல் ஆகிய நடவடிக்கைகளை அமெரிக்க அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். அதேபோன்று இலங்கையில் தற்போது நிலவும் மதச்சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகளை கருத்துக்கோரல், சந்திப்புக்கள், கடிதங்கள் ஊடாகக் கேட்டறிவதற்கு அமெரிக்க காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அவ்வருடாந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.