இலங்கை அணிக்கு எதிரான போட்டி: இந்திய அணி அபார வெற்றி.

  • Post author:
You are currently viewing இலங்கை அணிக்கு எதிரான போட்டி: இந்திய அணி அபார வெற்றி.

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 பந்துபரிமாற்ற போட்டி மராட்டிய மாநிலம் புனேவில் இன்று நடைபெற்றது.

நாணயசுழட்சியில் வென்ற இலங்கை அணித்தலைவர் மலிங்கா பந்து வீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் கே.எல்.ராகுல் அணிக்கு நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தினர்.

ஷிகர் தவான் (7 *4, 1 *6) 52 ஓட்டங்கள் எடுத்த நிலையில் இலங்கை வீரர் சண்டகா வீசிய பந்தில் ஆட்டமிழந்தார் . கடந்த நவம்பர் 2018-க்கு பிறகு முதல் முறையாக சர்வதேச டி-20 போட்டிகளில் தவான் 50 ஒட்டங்களை கடந்துள்ளார். அவருக்கு அடுத்ததாக களம் இறங்கி முதல் பந்திலேயே ஆறு அடித்த சஞ்சு சாம்சன் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக லோகேஷ் ராகுல் (54 ஓட்டங்கள்) சண்டகா வீசிய பந்தில் தனது இலக்கை பறிகொடுத்தார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்தடுத்து இலக்குகள் சரிந்த நிலையில் இந்திய அணியின் ஓட்ட வேகம் சற்று குறைந்தது. இதனை தொடர்ந்து அணித்தலைவர் விராட் கோலி, மனிஷ் பாண்டேவுடன் ஜோடி சேர்ந்தார்.

18 வது பந்துபரிமாற்றத்தில் விராட் கோலி (25 ஓட்டங்கள்) ஆட்டமிழந்து வெளியேறினார். அவரை தொடர்ந்து வந்த வாஷிங்டன் சுந்தர் முதல் பந்திலேயே ஆட்டமிழந்து வந்த வேகத்தில் திரும்பினார். கடைசி பந்துபரிமாற்றத்தில் மனிஷ் பாண்டே (18 பந்துகள் 31 ஓட்டங்கள்) மற்றும் ஷர்துல் தாக்கூர் (8 பந்துகள், 22 ஓட்டங்கள்) இருவரும் இலங்கை அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். இறுதியில் இந்திய அணி 20 பந்துபரிமாற்றத்தில் 6 இலக்கு இழப்பிற்கு 201 ஓட்டங்களை எடுத்தது.

பின்னர் 202 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணியின் சார்பில், குணதிலகா மற்றும் பெர்னாண்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். அதில் குணதிலகா 1 ஓட்டங்கள் , அவிஸ்கா பெர்னாண்டோ 9 ஓட்டங்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ஓஷாடா பெர்னாண்டோ 2 ஓட்டங்களும், குஷால் பெரேரா 7 ஓட்டங்களும், அதிரடி காட்டிய மேத்யூஸ் 31(20) ஓட்டங்களும், ஷனகா 9 ஓட்டங்களும், ஹசரங்கா (0) ஓட்டங்கள் ஏதும் எடுக்காமலும், ஷண்டகன் 1 ஓட்டங்கள் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த தனஞ்செயா டிசில்வா 57(36) ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இறுதியில் இலங்கை அணி 15.5 பந்துபரிமாற்றங்களில் அனைத்து இலக்குகளையும் இழந்து 123 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் நவ்தீப் சைனி 3 இலக்குகளும், தாகூர் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் தலா 2 இலக்குகளும், பும்ரா 1 இலக்கும் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவது 20 பந்துபரிமாற்ற போட்டியில், 78 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது.

பகிர்ந்துகொள்ள