இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது.
இருப்பினும் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, அப்பணிப்பெண்ணுக்கு அமைச்சின் ஊடாக அனுமதியளிக்கப்பட்டு, இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவு முழுமையாக செலுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் (பிரியங்கா) ஹிமாலி அருணதிலக நாடு திரும்புவதற்கு முன்பதாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறியதாகவும் தெரிவித்திருக்கிறது.
தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகிக்கும் ஹிமாலி அருணதிலக, கடந்த 2015 – 2018 வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார். அப்போது ஹிமாலி அருணதிலகவின் கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன இணைந்துகொண்டார்.
அங்கு மூன்று வருடங்களாக வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றிய பிரியங்காவுக்கு, அம்மூன்று ஆண்டுகளில் இரு நாட்கள் மாத்திரமே ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் உணவு சமைக்கும் போது அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டதன் காரணமாகவே அந்த ஓய்வு வழங்கப்பட்டதாக சிட்னியை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் தெரிவித்திருக்கிறார்.
மேற்குறிப்பிட்டவாறு முழுமையாக மூன்று ஆண்டுகள் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்காவுக்கு அதற்காக மொத்தமாக 11,212 டொலர்கள் மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் பிரியங்கா அவுஸ்திரேலியாவில் பணியாற்றத் தொடங்கிய 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாரமொன்றில் 36 மணிநேரப் பணிக்கான தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச ஊதியம் 656.90 டொலர்கள் எனவும் டேவிட் ஹிலார்ட் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
அதுமாத்திரமன்றி அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் பணிக்கு அமர்த்தியிருத்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் குறைந்தளவு ஊதியமே வழங்கப்பட்டிருத்தல் ஆகியவற்றின் விளைவாக ஹிமாலி அருணதிலகவினால் அவுஸ்திரேலியாவின் ஊழியச்சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், இது ‘நவீன அடிமைத்துவத்துக்கு’ சிறந்த உதாரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார்.
இவ்வாறானதொரு பின்னணியில் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் நியாயமான ஊழியச்சட்டத்தின்கீழ் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக பிரியங்கா தனரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சார்பாக சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் ஆஜராகியிருந்தார்.
இவ்வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து, ஹிமாலி அருணதிலகவினால் நியாய ஊழியச்சட்டம் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அவர் செலுத்தவேண்டியிருக்கும் 374,000 டொலர் நிலுவைச் சம்பளத்துடன், வட்டியாக 169,000 டொலரைச் சேர்த்து மொத்தமாக 543,000 டொலர்களை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்துமாறு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.
இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டு வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், வெளிநாடுகளில் இராஜதந்திரப்பதவிகளுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அவர்களது உதவிக்கென பணியாளர் ஒருவரை அழைத்துச்செல்வதற்கு அவசியமான வசதிகளை வெளிவிவகார அமைச்சு செய்துகொடுப்பது வழமையான விடயம் எனத் தெரிவித்துள்ளது.
அதேவேளை ‘இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வீட்டுப்பணிப்பெண் அவரது 3 வருட பணிக்காலத்தை முழுமையான நிறைவுசெய்திருந்த நிலையில், தொழில் வழங்குனர் (ஹிமாலி அருணதிலக) அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள் தொழில் வழங்குனரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறிவிட்டார். இருப்பினும் வீட்டுப்பணிப்பெண்ணின் ஊதியமாக வெளிவிவகார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த கொடுப்பனவு அவருக்கு முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டது’ எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.