இலங்கையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டு காதலி மற்றும் காப்பாற்ற குதித்த இளைஞன் ஆகியோர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் அவர்களின் உடல் நிலை தொடர்பில் ஆராய்வதற்காக தியத்தலாவ பாதுகாப்புப் படைத் தலைமையக மூத்த இராணுவ அதிகாரிகள் இருவர், தியத்தலாவை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.
கடந்த 3ஆம் திகதி கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிகே ரயிலில் பிரான்ஸ் இளம் ஜோடி ஒன்று பயணித்த நிலையில் செல்பி எடுக்க முயற்சித்த பெண் திடீரென ரயிலில் இருந்து தவறி விழுந்துள்ளார்.
ஓடும் ரயிலில் இருந்து திடீரென விழுந்த காதலியை காப்பாற்ற காதலனும் ரயிலில் இருந்து குதித்துள்ளார். அப்போது ரயிலில் இருந்த மற்ற பயணிகள் அவசர மணியை ஒலிரச் செய்து ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த விபத்தில் குறித்த இருவரும் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் தியத்தலாவை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தலை மற்றும் காலில் காயங்களுடன் பிரான்ஸ் நாட்டு பெண் முதலில் ஹப்புத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் இளைஞன் தற்போது மீண்டுள்ள நிலையில் பெண் மாத்திரம் சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவர்களை பார்க்க சென்ற இரு அதிகாரிகளும் உடல்நிலை குறித்து விசாரித்துள்ளனர். அத்துடன் காயத்திலிருந்து மீண்டு வர அனைத்து ஆதரவையும் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்ததுடன் விரைவில் குணமடைய வாழ்த்தினையும் தெரிவித்துள்னர்.
இலங்கையர்களின் அக்கறை மற்றும் கரிசனையால் ஈர்க்கப்பட்ட பிரான்ஸ் நாட்டு தம்பதியினர் இலங்கையர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தங்களுக்கு சிகிச்சை வழங்கும் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தங்கள் உடல் நலன் குறித்து பார்வையிட வந்த அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளனர்.